பசுவிற்கு வெடிகுண்டை உண்ணக் கொடுத்ததாக வதந்தி.

பரவிய செய்தி
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் பசுவிற்கு வெடிகுண்டை உண்ணக் கொடுத்துள்ளனர். அதைக் கடித்த பசுவின் வாய் வெடித்து சிதறியது என்றுக் கூறி சில வகுப்புவாத அமைப்புகளின் வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன.
மதிப்பீடு
சுருக்கம்
காட்டுப் பன்றிகளை கொல்லப் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டை தவறுதலாக கடித்த விளைவால் பசுவின் வெடித்து வாயானது சிதறியது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் இது போன்று சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விளக்கம்
மத்தியப்பிரதேச மாநிலத்தின் விதிஷா நகரத்தில் இஸ்லாமியர்கள் பசுவிற்கு வெடிகுண்டை உண்ணக் கொடுத்துள்ளனர். அதைக் கடித்த பசுவின் வாய் வெடித்து சிதறி இரத்த வெள்ளத்தில் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை. இந்துக்களின் போரட்டத்திற்கும் அனுமதி அளிக்கவில்லை என்று ஷன்க்ஹ்நாத் என்ற ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். மேலும், இரத்தம் சொட்டும் பசுவின் வீடியோவை சில வகுப்புவாத அமைப்புகள் தங்களது வலைதளங்களில் வெளியிட்டனர்.
இச்சம்பவம் நிகழ்ந்தப் பகுதியில் மக்கள் ஒன்றுக்கூடி போரட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். மேலும், போரட்டத்தில் ஈடுபட்ட சிலர் அப்பகுதியில் இருந்த குடிசைகளுக்கு தீயிட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் மதக்கலவரங்கள் நிகழ்வதைத் தடுக்க, உண்மையில் என்ன நடந்தது என்று இச்சம்பவம் குறித்து ஆராய்ந்து உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியிட்டனர்.
பசு வெடிகுண்டால் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து விதிஷா பகுதியின் எஸ்.பி வினீத் கபூர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “நாடோடி இன மக்கள் பன்றிகளை வேட்டையாட “ ஸோர் மார் வெடிகுண்டு ” என்ற கைகளால் செய்யக்கூடிய நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவர். மேய்ந்துக் கொண்டிருந்த பசு தவறுதலாக வைக்கப்படிருந்த வெடிகுண்டை எடுத்து மென்ற போது ஏற்பட்ட அழுத்தத்தால் வெடித்துள்ளது. இதனால் பசு அதிகளவில் பாதிக்கப்பட்டள்ளது. இதற்கு இஸ்லாமியர்களோ அல்லது பிற வகுப்பைச் சார்ந்தவர்களோ காரணமில்லை ” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பகுதியின் அனைத்து ஊடகங்களிலும் இதே காரணங்களே கூறப்பட்டன. இதே போன்று ஜனவரி 2017ல் மகாராஷ்டிரா மல்வன் பகுதியில் நாட்டு வெடிகுண்டை மென்றதால் பசு இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு இருக்கையில், மதத்தின் மீது கொண்ட கண்மூடித்தனமான நம்பிக்கையால் மற்றும் மற்ற மதத்தினர் மீது கொண்ட வெறுப்பினாலும் ஷன்க்ஹ்நாத் போன்ற பல வலைதளங்கள் நாட்டில் மதச் சண்டையை தோற்றுவிக்க முனைகின்றனர்.