பணக்காரக் கட்சிகளின் பட்டியலில் பா.ஜ.க முதலிடம்.

பரவிய செய்தி
இந்தியாவின் பணக்காரக் கட்சிகளின் பட்டியலில் பா.ஜ.க ரூ893 கோடியுடன் முதல் இடம். காங்கிரஸ் ரூ758 கோடியுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
2004-2005 நிதியாண்டில் ரூ122 கோடியே 93 லட்சமாக இருந்த பா.ஜ.க-வின் சொத்து மதிப்பு 2015-2016 நிதியாண்டில் ரூ893 கோடியே 88 லட்சமாக உயர்ந்துள்ளது
விளக்கம்
இந்திய தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் அளிக்கும் நிதிநிலை அறிக்கை விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, சென்ற 2015-2016-ம் நிதியாண்டிற்கான அரசியல் கட்சிகளின் சொத்து மற்றும் பொறுப்புகள் குறித்த ஜனநாயக சீர்திருத்த சங்கம்(ஏடிஆர்) ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள கட்சிகளின் சொத்து மதிப்பு பற்றி வெளியிட்ட இந்த அறிக்கையில், ஏழு தேசிய கட்சிகளில் பா.ஜ.க முதல் இடத்தையும், இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. 2004-2005-ம் நிதியாண்டில் பா.ஜ.க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து மதிப்பானது ரூ122 கோடியே 93 லட்சம் ஆகும். ஆனால் தற்போதைய 2015-2016-ம் நிதியாண்டில் பா.ஜ.க-வின் சொத்து மதிப்பானது ரூ893 கோடியே 88 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்திய தேசிய காங்கிரஸின் சொத்து மதிப்பானது 2004-2005-ம் நிதியாண்டில் ரூ167.35 கோடியாகவும், 2015-2016-ம் நிதியாண்டில் ரூ758.79 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில், பா.ஜ.க-வின் சொத்து மதிப்பானது 627 சதவீதம் அதிகரித்துள்ளது. 2004-2005 ஆம் ஆண்டில் ரூ108.63 கோடியாக இருந்த பா.ஜ.க கட்சியின் மூலதனம் மற்றும் இருப்பு தொகையானது தற்போது ரூ886.889 கோடியாக அதிகரித்துள்ளது. கடன் மற்றும் பொறுப்புகளை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு சதவீதம் கடந்த 11 ஆண்டுகளில் மிக அதிகமாக 4000 சதவீதத்துக்கும் மேல் வளர்ச்சி அடைந்துள்ளது.
இவ்விரு கட்சிகளும் சில ஆண்டுகளில் மிக வேகமாகவும், சில ஆண்டுகளில் குறைவாகவும் வளர்ச்சியடைந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற ஒரு சில தேசிய கட்சிகளின் சொத்துக்கள் மட்டுமே நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சொத்து மதிப்பு ரூ90.55 கோடியில் இருந்து ரூ437.78 கோடியாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மதிப்பு ரூ0.25 கோடியிலிருந்து ரூ44.99 கோடியாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பானது பல மடங்கு அதிகரித்துள்ளதை இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.