பாண்டிச்சேரி மீனவர்கள் பிடித்த அபூர்வமான மீனா ?

பரவிய செய்தி
பாண்டிச்சேரி மீனவர்கள் ஓர் அபூர்வமான மீனைக் கடலில் பிடித்துள்ளனர். பிடிபட்ட அம்மீனின் தலை மற்றும் வால் பகுதி மட்டுமே மீன் போன்று உள்ளது. ஆனால், தலைக்கும், வாலுக்கும் இடைப்பட்ட உடலமைப்பானது மனிதரின் உடல் போன்று அமைந்துள்ளது. மேலும், பிடிபட்ட மீனின் கைகளை பின்புறமாகக் கட்டிக் காட்சிக்கு வைத்துள்ளனர். இந்த வீடியோ பதிவை அதிகம் பகிரவும்.
மதிப்பீடு
விளக்கம்
சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில், மனித உடலமைப்பு கொண்ட ஓர் அபூர்வமான மீனின் கைகள் கட்டப்பட்ட நிலையில் மரப்பெட்டியில் வைக்கப்படிருப்பது போன்று எடுக்கப்பட்ட வீடியோவானது அதிகளவில் வைரலாகியது. மேலும், அந்த அபூர்வமான மீன் பாண்டிச்சேரி மீனவர்களால் பிடிக்கப்பட்டது என்று செய்திகளும் பரவி வருகின்றன.
எனினும், அதற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும், இது தொடர்பான செய்திகள் செய்திதாள்கள் மற்றும் ஊடகங்களிலும் வெளிவரவும் இல்லை. ஆனால், இந்த மீன் பற்றிய தகவல்கள் டிசம்பர் 9-ம் தேதி மியான்மர் நாட்டின் “ குளோபல் சின் போஸ்ட் ” வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
மியான்மர் நாட்டின் வடதெற்கே சுமார் 2170 கி.மீ நீளமுடைய ஐராவதி ஆறு உள்ளது. இந்த ஆறு அந்நாட்டின் மிக முதன்மையான வணிக நீர்வழித் தடமாக உள்ளது. இத்தகைய வணிகப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அபூர்வமான தோற்றம் கொண்ட மீனின் சிற்பத்தை உருவாக்கி உள்ளார். அந்த மீனின் தலை மற்றும் வால் பகுதியானது மீனின் தோற்றத்தில் இருக்கும், ஆனால் உடலின் மத்தியப் பகுதி மட்டும் மனிதரைப் போன்று கைகள், மார்பு, தொப்பை போன்ற வயிறு என்று அமைத்துள்ளார்.
இந்த அபூர்வமான மீனின் தோற்றம் உண்மையானது போன்று காட்சியளிப்பதற்காக சிலிக்கானைப் பயன்படுத்தி உள்ளார். சிலிக்கானைப் பயன்படுத்தி தத்ரூபமாக அமைத்ததோடு, அதனுள் இயந்திர மோட்டார்களையும் பொருத்தியுள்ளார். உண்மையான மீன் போன்று அசைவுகளைக் கொடுக்க இவ்வாறு வடிவமைத்துள்ளார். ஆதலால், மீன் வைக்கபட்டிருந்த மரப்பெட்டியின் கீழே பார்த்தால் மோட்டார்க்கு செல்லும் வயரைக் காணலாம்.
மேலும், இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் மியான்மர் நாட்டின் மொழியில் உள்ள வலைதளங்களில் மட்டுமே அதிகளவில் வெளியாகியுள்ளன. பிற மொழிகளில் வெளியாகாதக் காரணத்தினால் தவறான செய்திகளுடன் பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.