புதுக்கோட்டை இரயில் நிலையப் பெயர் பலகை இந்தியில் மாற்றம்

பரவிய செய்தி
புதுக்கோட்டையில் உள்ள இரயில் நிலையக் கட்டிடத்தின் நுழைவாயிலில் தமிழில் இருந்த பெயர் பலகையை மாற்றி இந்தியில் எழுதியுள்ளனர்.
மதிப்பீடு
விளக்கம்
கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் இந்தி திணிப்பானது அதிகரிப்பதை அனைவராலும் காண முடிகிறது. தமிழகத்தின் பல்வேறு அரசு திட்டங்கள் முதல் பெயர் பலகை வரையில் தமிழை ஓரம் கட்டிவிட்டு இந்தி மொழிக்கு முதன்மை தருகின்றனர்.
சென்னையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம், நெடுஞ்சாலை மைல் கற்கள் என அனைத்திலும் இந்தி மொழியை திணித்து வருகிறார்கள். குறிப்பாக, தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் தமிழை நீக்கி வீட்டு இந்தி மொழியில் பெயர்களை மாற்றியது மக்களிடையே அதீதக் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், புதுக்கோட்டையின் இரயில் நிலைய நுழைவாயிலின் மையப்பகுதியில் தமிழில் இருந்த புதுக்கோட்டை என்ற பெயர் பலகையை நீக்கி இந்தியில் மாற்றியுள்ளனர். அதற்கு இருபுறங்களிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழியால் பொறிக்கப்பட்ட பெயர் பலகையை வைத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த புதுக்கோட்டை மக்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் போரட்டத்தில் இறங்கினர். இதை தொடர்ந்து, மக்களை சமாதானப்படுத்த பெயர் பலகை மாற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், தற்போது வரை இந்தியில் உள்ள பெயர் பலகையை மாற்றுவதற்கு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில், பெயர் பலகை மாற்றப்படாத புதுக்கோட்டை இரயில் நிலையத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அனைவராலும் பரப்பப்படுகின்றது. மேலும், புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞர்களும், முகநூல் பக்கங்களும் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் முதன்மையாக இருந்த தமிழ் மொழியை ஒதுக்கி விட்டு இந்திக்கு முக்கியதுவமளிப்பது மனதிற்கு வேதனையை அளிக்கின்றது.