பூஜை செய்த பிராமணரை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கினார்களா?

பரவிய செய்தி
மேற்கு வங்கம் மாநிலத்தில் பிராமணர் ஒருவர் தனது வீட்டில் பூஜைச் செய்யும் போது அதிகம் ஒலி எழுப்பியதால் அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அவரை கொடூரமாகத் தாக்கிய காட்சி.
மதிப்பீடு
சுருக்கம்
பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டவரை பொதுமக்கள் தாக்கியப் பின் காவலர்கள் கைது செய்ததாக கொல்கத்தா காவல்துறை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
விளக்கம்
மேற்கு வங்கம் மாநிலத்தில் தனது வீட்டில் பிராமணர் ஒருவர் அதிக ஒலியுடன் மணி அடித்து பூஜைச் செய்ததால் அப்பகுதியில் வாழும் இஸ்லாமிய இளைஞர்கள் அவரை தாக்கியதாகக் கூறி ஃபேஸ்புக், ட்வீட்டர் போன்ற சமூக வலைதளங்களில் படங்களுடன் செய்திகள் காணப்படுகிறது.
மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் விதமாக இச்சம்பவம் நடந்துள்ளதாக பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வந்த வேளையில், கொல்கத்தா காவல்துறை இச்சம்பவம் தொடர்பான உண்மை செய்தியை வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல் துறை அளித்துள்ள தகவலின்படி, வீட்டில் பூஜை செய்யும் பிராமணரை இஸ்லாமிய இளைஞர்கள் தாக்கியதாக கூறிப் பரவி வரும் படங்களும், வீடியோக்களும் தவறானவை. உண்மை என்னவென்றால், கொல்கத்தா அருகில் கோவா பாகன் பகுதியில் உள்ள வீட்டில் நடக்கவிருந்த பூஜைக்காக வந்த ப்ரோகிதர் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டதால், அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்களும், பொதுமக்களும் அவரைத் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ப்ரோகிதரின் மீது 31-08-17 அன்று இரு வேறுப் பிரிவுகளில் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் மக்கள் இச்சம்பவத்தை தவறாகப் பரப்பி வருகின்றன. எனவே கொல்கத்தா காவல்துறைக்கு உண்மையான செய்தியை மக்களுக்கு தெரிவிக்கும் கடமை உள்ளது. உங்களிடம் தவறான வாசகங்களுடன் இந்த படங்களும், வீடியோக்களும் வந்தால் தயவு செய்து பகிர வேண்டாம் என்றும், காவல் துறைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் செப்டம்பர் 23-ம் தேதி கொல்கத்தா காவல்துறை தனது முகநூல், ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா காவல்துறையே சம்பவத்தை விளக்கிக் கூறியிருந்தாலும், பலரும் இச்செய்தியை தவறாகப் பரப்பி வருகின்றனர். குறுப்பிட்ட சில அமைப்பைச் சேர்ந்தவர்கள் தவறானச் செய்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டிவிடும் செயலைச் செய்து வருகின்றனர்.