பெண்களுடன் நேரு நெருக்கமாக இருக்கும் புகைப்படமா ?

பரவிய செய்தி
கவர்ச்சியான உடையணிந்து நடனமாடும் பெண்களுடன் இருக்கும் ஜவஹர்லால் நேருவின் அரியப் புகைப்படம்.
மதிப்பீடு
சுருக்கம்
1910 மற்றும் 1920 காலகட்டத்தில் கூட்டமாக பாட்டுபாடிக் கொண்டே நடனமாடும் பெண்களின் படங்களுடன் நேருவின் படத்தை இணைத்து வதந்தியைப் பரப்பியுள்ளனர்.
விளக்கம்
ஒரு தலைவரின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளில் அவர்களை பற்றிய சில தவறானப் படங்களைப் பரப்புவது வழக்கமாகவே இருந்து வருகின்றன.
இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு தேசத்தின் முதல் பிரதம அமைச்சராக பதவியேற்றவர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள். இன்றளவும் நேருவின் நிர்வாகத் திறமை மற்றும் காதல் விவகாரங்கள் பற்றி பல சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன.
அவற்றைத் தொடர்ந்து நேரு பல பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையங்களில் இன்றளவும் வைரலாகி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் நேரு, கவர்ச்சியான உடைகளை அணிந்து இருக்கும் பெண்களின் மத்தியில் இருக்கும் படம். இவ்வாறு இருக்கையில், நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இப்படங்கள் பகிரப்பட்டன.
உலகில் பிரபலமான பல நடிகைகள் தங்களது நடிக்கும் தொழிலை நடனத்தில் இருந்து தொடங்கியுள்ளனர். அவ்வாறு கூட்டாக நடனமாடும் தொழிலில் ஈடுபட்ட 1910 மற்றும் 1920 காலகட்டத்தைச் சேர்ந்த பல பெண்களின் கருப்பு, வெள்ளை புகைப்படங்களின் தொகுப்புகள் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகின. இவர்கள் அனைவரும் இணைந்து இசையுடன் பாடிக்கொண்டே நடனமாடும் கலை நிகழ்ச்சியை வழங்குபவர்கள். அத்தகைய பெண்களின் புகைப்படத் தொகுப்புகளில் ஒன்று தான் இப்படங்கள்.
நிகழ்ச்சியில் நடனமாடும் பெண்களின் படங்களையும், நேருவின் படங்களையும் போட்டோஷாப் மூலம் இணைத்து பரப்பியுள்ளனர்.
எனினும், நேருவிடம் நெருக்கமாக இருக்கும் பல பெண்களின் படங்கள் இணையத்தில் காணப்படுகின்றன. அவற்றில், பல படங்கள் எதேச்சையாக எடுக்கப்பட்டவை. ஆனால், அவை தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டவையும் ஆகும்.