மசூர் பருப்பை உண்டால் பக்க விளைவுகள் ஏற்படுமா ?

பரவிய செய்தி
மசூர் பருப்பை சாப்பிட்டதால் நரம்புக்கோளாறுகள் மற்றும் முடக்கு வாதம் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்ட காரணத்தினால் தடை செய்யப்பட்டது. ஆனால், தற்போது மசூர் பருப்பின் மீதான தடையை நீக்கி விற்பனை செய்ய உள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
மசூர் பருப்புடன் கேசரி பருப்பை கலப்படம் செய்வதால் நரம்புக்கோளாறுகள் மற்றும் முடக்கு வாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கலப்படமற்ற மசூர் பருப்பை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு இல்லை என்று உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
விளக்கம்
தமிழகத்தின் பள்ளிகளில் ஆரம்பத்தில் மதிய உணவு திட்டத்திற்கு மற்றும் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்க பயன்படுத்தப்பட்டது தான் இந்த மசூர் பருப்பு. இந்த பருப்பை சாப்பிட்டதால் குழந்தைகளுக்கு நரம்புக்கோளாறுகள் மற்றும் கை, கால் செயலிழப்பு போன்ற முடக்கு வாதம் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 2007 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மசூர் பருப்பு தடை செய்யப்பட்டு தமிழக நுகர்வுப்பொருள் வாணிபக் கழகத்தால் அரசாணையும் வெளியிடப்பட்டது.
ஆனால், தற்போது மசூர் பருப்பின் மீதான தடையை தமிழக அரசு நீக்க உள்ளது. மசூர் பருப்பை குறைந்த விலையில் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க எண்ணியுள்ளனர். மசூர் பருப்பின் மீதான தடையை நீக்குவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழக நுகர்வுப்பொருள் வாணிபக் கழகத்தின் இயக்குனர் கூறுகையில், மசூர் பருப்பானது தீங்கு இல்லாத உடலுக்கு நன்மை தரும் உணவுப்பொருள் ஆகும். ஆனால், அதில் சேர்க்கப்படும் கேசரி பருப்பால் தான் நரம்புக்கோளாறுகள் மற்றும் முடக்கு வாதம் ஏற்படுகிறது.
மசூர் பருப்பின் அடர் சிவப்பு நிறத்திற்காக அதில் சேர்க்கப்படும் கேசரி பருப்பின் விளைவால் தான் குழந்தைகளுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே கலப்படமில்லாத மசூர் பருப்பானது உடலுக்கு தீங்கு இல்லை என்பதால் மக்களுக்கு வழங்க இருப்பதாக கூறியுள்ளார்.
மசூர் பருப்பில் அதிகளவில் புரோட்டின் மற்றும் பி காம்ப்ளெக்ஸ் சத்துகள் உள்ளன. எனினும், அதன் நிறத்திற்காக அதனுடன் சேர்க்கப்படும் நிறமிகள் ஆபத்தானவை. குறைந்த விலையில் கிடைக்கும் கேசரி பருப்புகள் உடலுக்கு தீங்கானவை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவால் அறிவிக்கப்பட்டதை அடுத்து, 1961 ஆம் ஆண்டு கேசரி பருப்பு தடை செய்யப்பட்டது. எனினும், பல பகுதிகளில் கேசரி பருப்பானது மசூர் பருப்புடன் கலப்பு பயிராகப் பயிரிடப்பட்டது.
இந்தியாவில் பல்வேறு காலக்கட்டத்தில் பல பருப்புகள் தடை செய்யப்பட்டு, பின்னர் தடை நீக்கப்பட்டுள்ளன. அதைபோல், மசூர் பருப்பும் தடை நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் தரம் சோதித்த பின்னர் மசூர் பருப்பு போன்றவற்றை பயன்படுத்துவது சிறந்தது.