மாநில கட்சிகளில் பணக்கார கட்சிகளாக திமுக, அதிமுக டாப்.

பரவிய செய்தி
தேசிய கட்சிகளில் பணக்கார கட்சிகளாக ரூ893 கோடியுடன் பா.ஜ.க முதல் இடத்திலும், இந்திய தேசிய காங்கிரஸ் ரூ758 கோடியுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. மாநில கட்சிகளில் திமுக ரூ77 கோடியுடன் முதல் இடத்திலும், அதிமுக 54 கோடியுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் அளிக்கும் நிதிநிலை அறிக்கையை மையமாகக் கொண்டு 20151-2016 நிதியாண்டில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் வருவாய் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
விளக்கம்
இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தங்களது வரவு-செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். இந்நிலையில், 20151-2016-ம் ஆண்டில் அரசியல் கட்சிகள் சமர்பித்த வரவு-செலவு கணக்கு விவரங்களை குறித்து “ ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் “ ஆய்வு செய்தது.
இந்த ஆய்வில், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் வருவாய் உள்ளிட்ட சொத்து மதிப்பு பற்றி வெளியிட்ட அறிக்கையில் ஏழு தேசிய கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி முதல் இடத்தையும், இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. 2004-2005-ம் ஆண்டில் பா.ஜ.க-வின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து மதிப்பானது ரூ122 கோடியே 93 லட்சம் ஆகும். ஆனால், 2015-2016-ம் ஆண்டில் பா.ஜ.க-வின் சொத்து மதிப்பானது ரூ893 கோடியே 88 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்திய தேசிய காங்கிரஸின் சொத்து மதிப்பானது ரூ167.35 கோடியில் இருந்து ரூ758.79 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற சில தேசிய கட்சிகளின் சொத்துக்கள் மட்டுமே நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளன என்று கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 47 அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளில் 32 கட்சிகள் மட்டுமே கணக்கு தாக்கல் செய்துள்ளனர். 2015-2016-ம் ஆண்டில் கணக்கு தாக்கல் செய்த 32 மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாயானது ரூ221 கோடியாகும். இதில் 49% தொகை, அதாவது ரூ110 கோடியானது இன்னும் செலவழிக்கப்படாமல் உள்ளது. அதிக வருவாய் பெற்ற மாநிலக் கட்சிகளில் திமுக ரூ77.63 கோடியுடன் முதல் இடத்திலும், அதிமுக ரூ54.93 கோடியுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. எனினும், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களது வருவாயில் 80 சதவீதத்தை இன்னும் செலவழிக்காமல் உள்ளனர்.
நிதியானது எங்கிருந்து வந்தது என்பதே தெரியாத அடிப்படையில் மாநிலக் கட்சிகளுக்கு ரூ40 கோடியே 61 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. மேலும், 14 கட்சிகள் வருவாய்க்கு அதிகமாக செலவழித்துள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாட்டில் உள்ள தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் வருவாயானது ஆண்டாண்டுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை இந்த ஆய்வானது தெளிவுப்படுத்தியுள்ளது.