மும்பை இரயில் நிலையத்தின் விபத்திற்கு ரயில்வேயின் அலட்சியமும், வதந்தியுமே காரணம்.

பரவிய செய்தி
மும்பை இரயில் நிலையத்தின் விபத்தை முன்கூட்டியே பொதுமக்கள் எச்சரித்து இரயில்வே அமைச்சகத்திற்கு ட்வீட்டரில் தகவல்களை அனுப்பியுள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
மும்பை புறநகர் இரயில் நிலையத்தின் நடைமேம்பாலத்தின் பாதுகாப்பு சரியின்மை குறித்து பொதுமக்கள் விபத்திற்கு முன்பே இரயில்வே அமைச்சகத்திற்கு ட்வீட்டரில் புகார்கள் அளித்துள்ளனர். மேலும், வதந்திகளாலே இப்பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
விளக்கம்
மும்பையின் புறநகர் பகுதியான எல்பின்ஸ்டோன் சாலையின் இரயில் நிலையத்தில் அருகே உள்ள நடைமேம்பாலத்தில் எற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர், 38 பேர் படுகாயமடைந்தனர்.
செப்டம்பர் 29-ம் தேதி காலையில் மும்பையில் பலத்த மழைப் பெய்தது. எனவே, எல்பின்ஸ்டோன் சாலையில் உள்ள இரயில் நிலையத்தின் அருகே நடைமேம்பாலத்தில் மக்கள் ஒதுங்கினர். இதற்கிடையில், மின்கசிவு ஏற்பட்டதாக கூறிய வதந்தியின் காரணமாக மக்கள் வேகமாக படிகளைத் தாண்டி வெளியேற முயற்சித்த போது எற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர், 38 படுகாயமடைந்தனர். கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து இரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய இரயில்வே அமைச்சர் பியூஃஸ்கோயல் விபத்து தொடர்பான உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டார். எல்பின்ஸ்டோன் சாலையின் நடைமேம்பாலத்தில் நடந்த விபத்திற்கு தலைவர்கள் பலர் இரங்கல்களும், கண்டனங்களும் தெரிவித்தனர். மேலும், விபத்திற்கு ரயில்வே துறையின் அலட்சியமே காரணம் என்று அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.
ஒரு வருடங்களுக்கு முன்பே விபத்து நடந்த ரயில் நிலைய நடைமேம்பாலத்தின் பாதுகாப்புமின்மையைப் பற்றி இரயில்வே அமைச்சகத்திற்கு பொதுமக்கள் ட்வீட்டர்கள் மூலம் புகார்கள் அளித்துள்ளனர். ஆனால், நாட்டில் புல்லட் ரயில்கள் விடுவதைப் பற்றி சிந்திக்கும் அமைச்சகம், ஏற்கனவே பழுதடைந்த ரயில் நிலையங்களை கண்டுக்கொள்ளாமல் செய்த அலச்சியத்தால் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மும்பை உயர் நீதிமன்றத்தில் பிரதீப் பாலேகர்என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணையில், கூட்ட நெரிசலில் காயங்களுடன் தப்பித்த பெண் அளித்த வாக்குமூலத்தில் பாலம் இடிந்து விழப்போகிறது என்று சிலர் கத்தியதால் மக்கள் ஓடத் துவங்கியதின் விளைவாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். எனினும், இதே போல் காயமடைந்த மற்றொரு பெண் பாலத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது என்று சிலர் சொன்னதால், அனைவரும் ஓடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
எனவே மக்களிடையே பரவிய வதந்தியேக் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபத்திற்கு காரணம் என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். நாட்டில் வேடிக்கையாக கூறப்படும் வதந்திகள் கூட பலர் உயிரை இழப்பதற்கு கருவியாக அமைகிறது.