மோசமான கல்வித் தரத்தில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்.

பரவிய செய்தி
மோசமான கல்வித் தரம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம் என்று உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
உலகில் உள்ள 20 நாடுகளின் கிராமப்புற பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் பற்றிய கருத்துகணிப்பில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
விளக்கம்
“ கல்வி மீதான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கற்றல் உலக மேம்பாட்டு அறிக்கை 2018 “ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய உள்ளிட்ட நாடுகளில் உள்ள கிராமப்புறப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பல நாடுகளின் கிராமப்புறத் தொடக்க நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் பின்தங்கி மோசமாக உள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது என்ற செய்தி அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கிராமப்புறப் பள்ளிகளில் 3-ம் வகுப்பு பயிலும் பெரும்பாலான மாணவர்களுக்கு இரண்டு இலக்க கழித்தல் கூட தெரியவில்லை. உதாரணமாக, மாணவர்களிடம் 46-ல் 17-ஐ கழித்தல் என்ற கேள்விக்கு கூட விடை காண முடியவில்லை. மேலும், பள்ளிகளில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகியும் பல லட்சம் மாணவர்களால் சரியாக எழுதப் படிக்க தெரியவில்லை என்றும், குறிப்பாக அடிப்படை கணிதத்தில் மிகவும் பலவீனமாக இருப்பதாக க் கூறியுள்ளனர்.
இந்திய கிராமப்புறத்தில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவனுக்கு 2-ம் வகுப்பு பாடத்திட்டத்தை மட்டுமே நன்றாக படிக்கவும், எழுதவும் தெரிகிறது. அவையும் எளிமையான வார்த்தைகள் இருந்தால் மட்டுமே நன்றாகப் படிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், 5-ம் வகுப்பு படிக்கும் பல மாணவர்களுக்கு 1-ம் வகுப்பு பாடத்தில் உள்ள கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க முடியவில்லை.
மேலும் உலக வங்கியின் அறிக்கையில், அடிமட்ட மற்றும் நடுத்தர வருவாய் உள்ள குடும்பங்களின் குழந்தைகளின் கல்வித் தரம் மிகவும் மோசமாக உள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வியை சரியாக கற்று தராமல் இருப்பதே இந்த மோசமான நிலைக்கு காரணம் ஆகும். இதனால் குழந்தைகள் பின்னாளில் வேலைவாய்ப்பின்றி சிரமப்படும் நிலை உருவாகும்.
இது குறித்து உலக வங்கியின் குழுத் தலைவர் ஜீம் யோங் கிம் கூறுகையில், பல நாடுகளில் கல்வித்தரம் மோசமாக உள்ளது. இதனால் வருங்காலத்தில் இந்தியா போன்ற நாடுகளில் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும். இந்நிலையை தீர்க்க இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.