மோடியின் செல்வாக்கு சரியவில்லை- அமெரிக்க ஆய்வு மையம்.

பரவிய செய்தி
இந்தியாவில் பிஜேபி ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகள் ஆகியும் மக்களின் மத்தியில் மோடியின் செல்வாக்கு இன்னமும் குறையவில்லை என்று அமெரிக்க ஆய்வு மையமான “ பியூ “ தெரிவித்துள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
அமெரிக்க ஆய்வு நிறுவனத்தால் இந்தியாவில் சுமார் 2464 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையில், 10-ல் 9 பேர் மோடியை ஆதரிப்பதாக கூறியுள்ளனர். மோடியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை இன்னமும் குறைவில்லை என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், பல மாநிலங்களில் இந்த ஆய்வு நடத்தப்படவில்லை என்பதே உண்மை.
விளக்கம்
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான “ பியூ ” சார்பில் இந்தியாவில் பிப்ரவரி முதல் மார்ச் வரையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் நிகழும் அரசியல் சூழல் தொடர்பாக சுமார் 2464 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக கூறியுள்ளனர். இதன் முடிவுகளை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டனர்.
இந்த ஆய்வறிக்கையில், நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில் 10 இல் 9 இந்தியர்கள் மோடிக்கு அதரவு தெரிவித்துள்ளனர். வட இந்தியாவில் மோடிக்கு அதிக அளவில் செல்வாக்கு உள்ளது. தென்னிந்தியாவை பொருத்தவரை மோடிக்கு ஆதரவு பெருகி உள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் தென் மாநிலங்களில் 95%, அதாவது பத்தில் ஒன்பது பேர் மோடிக்கு ஆதரவாக கருத்துக் கூறியுள்ளனர்.
மேலும், இந்தியாவில் பிஜேபி, காங்கிரஸ், மோடி, ராகுல் காந்தியின் செல்வாக்கை ஒப்பிடுகையில், மோடிக்கு 88% ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் ராகுல் காந்திக்கு 58% ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. பிஜேபி கட்சிக்கு 84% மற்றும் காங்கிரசிற்கு 59% ஆதரவு கிடைத்துள்ளது. ஆக, மக்களிடையே மோடிக்கு உள்ள செல்வாக்கானது ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை விட 31% அதிகமாக உள்ளது.
இதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள மக்களில் 85% பேர் “அரசின் மீது நம்பிக்கை” கொண்டுள்ளதாக ஆய்வில் தெரிகிறது. இந்தியாவின் “ஜனநாயக முறை” 79% மக்களுக்கு திருப்தி அளிப்பதாகவும் கூறியுள்ளனர். மோடி பிரதமராக பதவியேற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் அவரது அலை இன்னமும் ஓயவில்லை! ஓயவில்லை! என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.
எனினும், இத்தகைய ஆய்வானது 132 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வெறும் 2464 பேரிடம் மட்டுமே நடந்துள்ளது. மேலும் கேரளா, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்த ஆய்வானது நடந்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.