ரஜினிமன்றம் இணையதளத்தில் 50 லட்சம் பேர் இணைந்தனரா ?

பரவிய செய்தி
நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பித்திருக்கும் ரஜினிமன்றம் இணையதளத்தில் 24 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில், ரஜினிமன்றம் இணையதளத்தில் ஒரே நாளில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக கூறி வெளியான தவறான தகவலை உண்மையென்று நினைத்து சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. எனினும், ரஜினிமன்றம் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
விளக்கம்
ஜனவரி 1, 2018 அன்று நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டமாக, தனது ரசிகர்களை ரஜினிமன்றம் ( Rajinimandram.org ) என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்ய அழைப்பு விடுத்திருந்தார். ரஜினிகாந்திற்கு தோராயமாக “ 50,000 “ பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்கள் இருப்பதாகவும், அவர்களை ஒன்றிணைக்கும் தளமாக “ ரஜினிமன்றம் இணையதளம் “ இருக்கும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். ஆண்ட்ராய்டு செயலி மூலமும் ரசிகர்களை இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஜினிமன்றம் இணையதளம் குறித்து ரஜினிகாந்த் தனது அறிவிப்பை வெளியிட்ட 24 மணி நேரத்தில், ரஜினிமன்றம் இணையதளத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளனர் என்றுக் கூறி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
இச்செய்தியின் தொடக்கம் இரண்டு நாட்களுக்கு முன்பு “ இந்தியா டுடே ” ஆங்கிலப் பத்திரிகையில் ரஜினிகாந்தின் ரஜினிமன்றம் இணையதளத்தில் 50 லட்சம் பேர் இணைந்ததாக செய்திகள் வெளியாகியது. பின்னர் சில நிமிடங்களிலே 50,000 பேர் என்று திருத்தியுள்ளனர். தாங்கள் எண்ணிக்கையை தவறாக குறிப்பிட்டதாக இந்தியா டுடே திருத்தியமைக்கப்பட்ட கட்டுரையில் கீழே குறிப்பிட்டுள்ளனர். இந்தியா டுடே மட்டுமின்றி பல ஊடகங்கள் ஒன்றுகொன்று முரணான எண்ணிக்கையை தெரிவித்துள்ளனர்..
இவ்வாறு இருக்கையில், மறுபுறம் ரஜினிமன்றம் தளத்தில் 50 லட்சம் பேர் இணைந்ததாகக் கூறி அத்தளத்தின் முகவரியைக் காண்பித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன. எனினும், அதில் இடம்பெற்ற “ rajnimanram.org ” என்ற முகவரி போலியாவை.. rajinimanram என்று பிழையோடு காண்பிக்கப்பட்ட இத்தளத்தை உண்மை என்று நினைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது போன்று பல போலியான இணையதளங்கள் இருக்க வாய்ப்புள்ளன. ஊடகங்களும் கூட இந்த போலியான தளத்தை உண்மை என்று நினைத்து தவறான செய்திகளை வெளிட்டு இருக்கலாம்.
ரஜினிமன்றம் இணையதளம் குறித்து “ டைம்ஸ் நவ் ” பத்திரிகையாளர் ஷப்பீர் அஹ்மத் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஒரே நாளில் ரஜினிமன்றம் இணையதளத்தில் 50 லட்சம் பேர் இணைந்ததாகக் கூறுவது தவறு. இதுவரை அந்த இணையதளத்தை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளனர், பத்தாயிரம் பேர் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர், 3 லட்சம் பேர் ரஜினிமன்றம் இணையதளத்தில் பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார் ”.
ரஜினிமன்றம் செயலியை ஜனவரி 3-ம் தேதி இரவு வரை 1 லட்சம் பேர் மட்டுமே பதிவிறக்கம் செய்துள்ளனர். “ உண்மை, உழைப்பு, உயர்வு “ என்று கூறி ஆரம்பிக்கப்பட்ட ரஜினியின் அரசியல் முன்னோட்டத்திலேயே பல்வேறு குழப்பங்களை சிலர் ஏற்படுத்தியுள்ளனர். எனினும், ரஜினிமன்றத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. உண்மையான பதிவு செய்தவர்களின் எண்ணிகையை அதிகாரப்பூர்வமாக ரஜினிமன்றம் வெளியிட்டால் தான் உண்மை புலப்படும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.