ரூ62,000-க்கு சில்லறை கொடுத்து ஸ்கூட்டர் வாங்கிய சிறுவன்.

பரவிய செய்தி
13 வயதுடைய சிறுவன், சில்லறையாச் சேமித்து வைத்திருந்த 62,000 ரூபாய் பணத்தில் தனது சகோதரிக்கு இருசக்கர வாகனத்தை வாங்கி தந்துள்ளான்.
மதிப்பீடு
சுருக்கம்
தன் சகோதரிக்கு இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கும் நோக்கத்தில், தான் சில்லறை நாணயமாகச் சேமித்து வைத்திருந்த ரூ62,000 பணத்தை எடுத்துக் கொண்டு வாகனம் வாங்க 13 வயது சிறுவனும், அவனது சகோதரியும் ஷோரூமிற்கு சென்ற சம்பவம் ஜெய்ப்பூரில் நிகழ்ந்துள்ளது.
விளக்கம்
ஜெய்பூர் மாநிலத்தில் உள்ள ஹோண்டா வாகன ஷோரூமிற்கு 13 வயதுடைய யாஷ் என்ற சிறுவனும், அவனது சகோதரியும் சென்றுள்ளனர். சிறுவன் தனது சகோதரிக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு தேவையான ரூ62,000 என்ற முழுத் தொகையையும் நாணயமாக கொண்டு சென்ற செய்திச் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இது குறித்து ஷோரூமின் உரிமையாளர் சந்தோஷ் குமார் கூறுகையில், தீபாவளி முடிந்து அக்டோபர் 19-ம் தேதி யாஷ் என்ற சிறுவனும், அவனது சகோதரியும் ஷோரூமிற்கு வந்தனர். யாஷ், ஷோரூம் பணியாளரிடம் தான் கொண்டு வந்த பையில் இருந்த நாணயங்களை காண்பித்து வாகனம் வாங்க வந்ததாகக் கூறினான். இதனால் ஷோரூமில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, பணியாளர்கள் யாரும் சிறுவனின் வார்த்தைகளை ஏற்க மறுத்தனர்.
எனினும், இவையனைத்தும் பல ஆண்டுகளாக தான் கஷ்டப்பட்டு சிறுக சிறுகச் சேமித்து வைத்த பணம் ஆகும். இதை வைத்து தனது சகோதரிக்கு இருசக்கர வாகனம் வாங்கித் தர ஆசைப்படுகிறேன் என்றும், நாணயங்களை பணமாக மாற்றுவதற்கு பல நாட்கள் ஆகலாம் என்றெல்லாம் கூறி அவர்களை சமாதானப்படுத்தியுள்ளான்.
இறுதியாக அவனது நாணயங்களை ஏற்றுக் கொண்ட பணியாளர்கள் அந்த நாணயங்களை எண்ணத் தொடங்கினர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அனைத்தையும் எண்ணி முடித்தனர். தங்களுது விற்பனையில் பல்வேறு வாடிக்கையாளர்கள் வாகனத்திற்கு செலுத்தும் பணத்தில் பல சில்லறை நாணயங்களைக் கொடுத்துள்ளனர். ஆனால், வாகனத்திற்கு தேவையான முழுத் தொகையையும் நாணயமாகச் செலுத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது இவர்கள் மட்டுமே என்றுக் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் பலர் அச்சிறுவனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.