This article is from Jan 02, 2018

ரேஷன் கடைகளை ஷாப்பிங் மால்களாக மாற்றிய ஆந்திர முதல்வர்.

பரவிய செய்தி

ஆந்திர மாநிலத்தில் ரேஷன் கடைகளை ஒருங்கிணைந்த ஷாப்பிங் மால்களாக மாற்றும் முயற்சியில் அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சித்து வருகின்றார்.

மதிப்பீடு

சுருக்கம்

ஜனவரி மாதம் ஆந்திராவில் உள்ள 29,000 ரேஷன் கடைகளை “ சந்திரண்ணா வில்லேஜ் மால்கள் ” ஆக மாற்றப்போவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஏழை மக்களுக்கு நியாயவிலையில் உணவுப் பொருட்கள் வழங்குவதற்காக இத்திட்டம் துவங்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

விளக்கம்

தமிழகத்தில் ரேஷன் கடைகள், ரேஷன் அட்டைகள் செயலற்ற நிலையில், அண்டை மாநிலமான ஆந்திராவில் ரேஷன் கடைகள் புதிய புரட்சிக்கு தயாராகி விட்டன. அங்குள்ள ரேஷன் கடைகள் ஷாப்பிங் மால்களாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றனர். “ சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால்கள் ” என்ற பெயரில் ஜனவரி 2018-லிருந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் 29,000  கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளனர். இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஆந்திராவின் குண்டூர் மற்றும் விஜயவாடாவில் சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால்களை டிசம்பர் 12-ம் தேதி சந்திரபாபு நாயுடு ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்து வைத்தார்.

 ஆந்திராவில் “ சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால்கள் ” பல்வேறு பொருட்கள் கிடைக்கும் வணிக வளாகங்களாய் மாற உள்ளன. இதற்காக ரிலையன்ஸ் மற்றும் பியூச்சர் குரூப் ஆகிய இரு நிறுவனங்களிடம் ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒவ்வொரு ஷாப்பிங் மால்களில் உணவு மற்றும் உணவு அல்லாத 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வர உள்ளன. இங்கு ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம். சந்தை விலையை விட 20 சதவீதம் குறைவான விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. விற்பனை செய்யப்படும் பொருட்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் கிரிஜன் கோ-ஆப்ரேடிவ் கார்ப்பரேஷன் மூலமாகவும், விவசாயம் சார்ந்த பொருட்கள் விவாயிகளிடம் இருந்தே பெறப்படும் என்றும் கூறியுள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் பொது மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிலேயே தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நியாயமான விலைக்கு வாங்கி பயனடையலாம் என்று கூறியுள்ளனர். இனி வரும் காலங்களில் அந்த ஷாப்பிங் மால்கள் மூலம் மருந்துகள், மின்னணு பொருட்கள் உள்ளிட்டவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

    எனினும், இத்திட்டம் பெரிய நிறுவனங்களுக்கு உதவி புரியும் வகையில் உள்ளதாகவும், இதனால் சிறு வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், என்.டி.ஆர் வில்லேஜ் மால் என்று பெயரிட்ட திட்டத்தை சந்திரண்ணா வில்லேஜ் மால் என்று மாற்றியதாகவும் நடிகை ரோஜா கூறியுள்ளார்.

நுகர்வோரான டி.சிவபார்வதி என்பவர் கூறுகையில், ” சந்திரண்ணா வில்லேஜ் ஷாப்பிங் மால்கள் திறந்து விற்பனை தொடங்கிய நிலையில், அங்குள்ள பொருட்களின் விலையானது மொத்த வியாபார நிலையங்களில் உள்ள விலையை விட அதிகம் இருக்கிறது. இந்த மால்கள் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடைகளை போன்றே உள்ளது. அவர்களின் பொருட்களை விற்பனை செய்வதற்கு ரேஷன் கடைகளை பயன்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார் “.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader