ரோட்டோமேக் பேன்ஸ் நிறுவனத்தின் தலைவர் தப்பி ஓட்டமா ?

பரவிய செய்தி
புதிய வங்கி மோசடி அம்பலம்! வங்கிகளில் ரூ.800 கோடி கடன் பெற்று மாயமான ரோட்டோமேக் பேன்ஸ் நிறுவன அதிபர்.
மதிப்பீடு
சுருக்கம்
ரோட்டோமேக் பேன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி எங்கும் தப்பித்து செல்லவில்லை. எனினும், அவர் மீது சிபிஐ எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தினர் .
விளக்கம்
மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,000 கோடிக்கு மேல் நிதி மோசடி செய்து வெளிநாட்டிற்கு தப்பித்து சென்றார். இதைத் தொடர்ந்து நீரவ் மோடியின் வங்கி மோசடி இந்திய அளவில் பரபரப்பான செய்தியாகியது.
இச்சம்பவத்தை தொடர்ந்து மற்ற வங்கிகளில் தொழிலதிபர்கள் செய்துள்ள மோசடிகள் மற்றும் கடனை திருப்பி செலுத்தாது தொடர்பான ஏதேனும் சம்பவங்கள் நிகழுமா? என்று மக்கள் கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.
நீரவ் மோடியின் வங்கி மோசடி செய்தியே ஓயாத நிலையில், ரோட்டோமேக் பேன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி ரூ.800 கோடி கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பித்து சென்றதாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பரவின.
Rotomac Global Private Limited என்ற நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி, அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் யூனியன் பேங்க் உள்ளிட்ட 5 வங்கிகளில் 4,232 கோடிக்கும் அதிகமான கடனை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை வங்கியில் பெற்ற கடனையும், வட்டியையும் திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.600 கோடிக்கு விக்ரம் கோத்தாரி கொடுத்த காசோலை திரும்பி விட்டது என்று புகார் அளிக்கப்பட்டதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது மால் ரோடு அலுவலகம் பூட்டப்பட்டிருந்த காரணத்தால், விக்ரம் கோத்தாரி வெளிநாட்டிற்கு தப்பித்து சென்று விட்டார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதற்கு மறுப்பு தெரிவித்த விக்ரம் கோத்தாரி, “ நான் எங்கும் தப்பித்து செல்லவில்லை. நான் ஒரு இந்திய குடிமகன், கான்பூரில் என் குடும்பத்துடன் இருக்கின்றேன். முதலில் இது மோசடியே அல்ல! வங்கியில் பெற்ற லோன் விவகாரம் குறித்து வங்கி அதிகாரிகளிடம் பேசி வருகிறேன். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. காசோலை பௌன்ஸ் ஆகியது என்று என் மீது அவதூறு பரப்புக்கின்றனர். நான் வங்கியுடன் தொடர்பில் உள்ளேன், கூடிய விரைவில் கடனை திருப்பி செலுத்துவேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் விக்ரம் கோத்தாரி வாங்கிய 800 கோடி ரூபாய் கடனை திருப்ப செலுத்தவில்லை என்று அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆக, நீரவ் மோடி போன்று விக்ரம் கோத்தாரியும் வெளிநாட்டிற்கு தப்பித்து செல்ல கூடாது என்பதற்காக சிபிஐ விக்ரம் கோத்தாரியை உத்திரப்பிரதேசத்தில் வைத்து பல மணி நேரங்களாக விசாரணை செய்தனர்.
விக்ரம் கோத்தாரிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், Ed enforcement directory-யும் வழக்கு தொடர்ந்து உள்ளது. அவரது சொத்துகளுக்கு சீல் வைத்துள்ளனர். வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் விக்ரம் கோத்தாரியின் சொத்துகள் விற்கப்படும் என்று அலகாபாத் வங்கியின் மேலாளர் ராஜேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.