வீடியோவில் இருப்பது பங்களாதேஷில் இயங்கும் கள்ளநோட்டு தொழிற்சாலையா?

பரவிய செய்தி
பங்களாதேஷில் கள்ள நோட்டு அச்சடிக்கும் தொழிற்சாலையில் இந்தியா ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படும் அதிர்ச்சி வீடியோ.
மதிப்பீடு
சுருக்கம்
வீடியோவில் இருக்கும் இந்திய ரூபாய் நோட்டுகள் குழந்தைகள் விளையாடுவதற்காக பயன்படுத்தப்படும் போலி நோட்டுகள் ஆகும். அதில் சீரியல் எண்கள் உள்ளிட்ட எத்தகைய குறியீடுகளும் இடம்பெறாததைக் காணலாம்.
விளக்கம்
டிசம்பர் 27, 2017-ல் பங்களாதேஷ் காவல்துறையில் உள்ள தீவிர நடவடிக்கை படைப்பிரிவினரால் கள்ள நோட்டு தொழிற்சாலையை நடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகில் உள்ள கேரணிகாஞ்சி பகுதியில் லியாகோட் அலி மற்றும் ஜகாங்கிர் அலாம் இருவரும் 50-60 மில்லியன் மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுகளை போலியாக அச்சிட்டு, புழக்கத்தில் விட்டுள்ளனர். டாக்கா பகுதியில் உள்ள பல இடைத்தரகர்களை கொண்டு கள்ள நோட்டுகளை மாற்றி வந்துள்ளார். மேலும், ஒரு மில்லியன் கள்ள நோட்டுகளை ரூ.12,000 வீதம் விற்று வந்துள்ளனர் என்று பங்களாதேஷ் படைப்பிரிவைச் சேர்ந்த எல்டி கலோனேல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் போலியான இந்தியா ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாக கூறி ஒரு வீடியோ பதிவானது வாட்ஸ் அஃப், ஃபேஸ் புக், யூ டியூப் போன்றவற்றில் வைரலாகி வருகிறது.
பங்களாதேஷில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது உண்மை என்றாலும், இந்த வீடியோக்கும் அதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த வீடியோவில் அச்சடிக்கப்படும் நோட்டுகளை நன்றாக கவனித்தோமேயானால், அதில்
- வரிசை எண் இல்லை
- ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா இல்லை
- ஆர்.பி.ஐ சின்னம் இடம்பெறவில்லை
- கவர்னரின் கையொப்பம் இல்லை
- இந்திய ரூபாயின் குறியீடு இல்லை.
ஆக, வீடியோவில் காண்பிக்கப்பட்ட இந்திய நோட்டுகள் கள்ள நோட்டுகளும் அல்ல, அது அச்சடிப்பது பங்களாதேஷும் அல்ல. வீடியோவில் இருக்கும் இந்திய ரூபாய் நோட்டுகள் குழந்தைகள் விளையாடுவதற்காக பயன்படுத்தும் போலி நோட்டுகளாகவோ அல்லது சினிமாவில் பயன்படுத்தும் நோட்டுகளாகவோ இருக்கக்கூடும்.