வெளிநாடுகளுக்கு குடிபெயர்வதில் இந்தியர்கள் முதலிடம்.

பரவிய செய்தி
வேலை செய்வதற்காக வெளிநாடுகளுக்கு குடிபெயர்வதில் உலகிலேயே இந்தியர்கள் முதலிடம் என்று ஐ.நா-வின் அறிக்கை தெரிவிக்கின்றது.
மதிப்பீடு
சுருக்கம்
2017 ஆம் ஆண்டிற்கான வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வோர் பற்றிய ஐ.நா சபையின் அறிக்கையில், 1.7 கோடி (17 மில்லியன்) இந்தியர்கள் வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர். அதில் 50 லட்சம் (5 மில்லியன்) இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் உள்ளதாக கூறியுள்ளனர்.
விளக்கம்
தேசிய குடிபெயர்வோர் நாள் ஆன டிசம்பர் 18, 2017-ல் ஐக்கிய நாடுகள் டேசா அமைப்பு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், உலகளவில் 258 மில்லியன் மக்கள் தங்கள் பிறந்த நாடுகளில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடிபெயர்ந்து வாழ்ந்து வருவதாகவும், இவ்வாறு குடிபெயர்வோர்களின் எண்ணிக்கை 2000-ம் ஆண்டிலிருந்து 49 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கின்றன.
ஐ.நா அறிக்கையில், நாட்டில் நிலவும் வேலையின்மையால் வெளிநாடுகளுக்கு குடிபெயரும் மக்களின் பெருக்கத்தால் உலகின் பல நாடுகளில் மக்கள் தொகை அதிகரிப்பதாகவும், அதேவேளையில் சில பகுதிகளில் மக்கள் தொகை குறைவதாகவும் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 2000-2015 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் ஏற்பட்ட மக்கள் தொகை பெருக்கத்தில் வடக்கு அமெரிக்காவில் 42 சதவீதம் மற்றும் ஓசியானியாவில் 31 சதவீதம் குடிபெயர்வோர்களின் பங்களிப்பு இருக்கின்றன. 2017 நிலவரப்படி, வெளிநாடுகளில் குடிபெயர்ந்து வேலை செய்பவர்களில் 74 சதவீதம் பேர் 20 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இவ்வாறு குடிபெயர்வோர்களில் 64 சதவீதம் பேர் செல்வளமிக்க நாடுகளில் வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ளனர்.
” உலகளவில் வேலை நிமித்தமாக பிறந்த நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருபவர்களின் எண்ணிகையில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்று ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு வரை 17 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வெளிநாடுகளில் வேலைக்காக குடிபெயர்ந்து வாழ்ந்து வரும் இந்தியர்களில் 5 மில்லியன் பேர் வளைகுடா நாடுகளான ஐக்கிய அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவில் உள்ளனர் “.
2000-ம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. வேலைக்காக இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இந்தியர்களின் எண்ணிகை வளைகுடா நாடுகளான ஐக்கிய அமீரகம், சவூதி அரேபியா, ஓமன், குவைத் போன்றவற்றில் அதிகளவில் உள்ளது. மேலும், அமெரிக்காவில் 20 இந்தியர்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். 2017-ம் ஆண்டு வரை 13 மில்லியன் மெக்சிகன் மக்கள் வெளிநாடுகளில் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ரஷ்யா, சீனா, பங்களாதேஷ், சிரியா, பாகிஸ்தான், உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர்.
எனினும், ” ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளைத் தவிர்த்து மற்ற நாடுகளில் குடிபெயர்ந்து வாழ்ந்து வரும் மக்களில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் உள்ளனர் என்று ஐ.நா அறிக்கையில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது “.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.