ஹாசினி குழந்தையைக் கொன்றவன் ஜாமீனில் விடுதலை.

பரவிய செய்தி
போரூர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு. கொலையாளி தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
மதிப்பீடு
சுருக்கம்
தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ததின் விளைவாக கொலையாளி ஜாமீனில் வெளி வந்துள்ளான்.
விளக்கம்
கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி சென்னை அருகே முகலிவாக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஹாசினிஎன்ற 7வயது குழந்தையை காணவில்லை என்று குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின் நான்கு நாட்களுக்கு பிறகு சிறுமியின் உடல் எரிந்த நிலையில் அனகாபுத்தூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அதே குடியிருப்புப் பகுதியின் மேல்தளத்தில் வசித்து வரும் தஷ்வந்த் என்ற இளைஞன் ஹாசினியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து தஷ்வந்தனை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், தனது வீட்டிற்கு வந்து விளையாடிக் கொண்டிருந்த ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகவும், குழந்தையின் உடலை எரித்ததாகவும் தெரியவந்ததை அடுத்து கொலையாளியின் மீதுகுண்டர் சட்டம் போடப்பட்டது.
ஆனால் தன் மகன் மீது போடப்பட குண்டர் சட்ட நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தஷ்வந்த்தின் தந்தை. 7 மாதங்களுக்குப் பிறகு தஷ்வந்தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது உயர் நீதிமன்றம். குண்டர் சட்டம் ரத்தானதால் கொலையாளி எளிதில் ஜாமீனில் வெளிவந்தான். குற்றவாளியின் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஜாமீன் வழங்கியது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹாசினியின் தந்தை, தனது மகளை வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றவனின் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஜாமீன் வழங்கியது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், அவன் வெளியே இருந்தால் பலரையும் கொல்ல அஞ்சமாட்டான் என்றும் கூறினார். மேலும் கொலையாளியின் தந்தை தனது மகனை வெளியே கொண்டு வருவேன் என்று தன்னிடம் சவால் விட்டதாகவும், ஹாசினி இறந்த அதிர்ச்சியில் இருந்து தனது மனைவி இன்னும் மீளவில்லை என்றும் கூறினார்.
ஹாசினி குழந்தை வழக்கில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போன்ற சம்பவங்கள் நடக்கா வண்ணம் குற்றவாளியின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறினார்.
எப்போது சட்டங்கள் கடுமையாகின்றதோ அன்றே குற்றங்கள் குறையும்….!