ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு 10 கோடி வழங்கியது.

பரவிய செய்தி
ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு சார்பில் 10 கோடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
ஜெயலலிதா அவர்களின் 2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையின்படி, ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 10 கோடி வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
விளக்கம்
ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு சார்பில் 10 கோடி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
350 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹார்வர்ட் பல்கலைகழகம் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. அத்தகைய பல்கலைகழகத்தில், 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கும் முயற்சிகள் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. “ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பு” என்ற பெயரில் தமிழ் இருக்கைக்கான நிதியை திரட்டி வருகின்றனர்.
தமிழுக்கு இருக்கை அமைக்க ஹார்வர்ட் பல்கலைகழகம் அனுமதி அளித்ததும், அதற்க்கு தேவையான மொத்த நிதியான ரூ39 கோடியில் ரூ6 கோடியை அமெரிக்காவில் வாழும் மருத்துவர்களான திரு.ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் நன்கொடையாக வழங்கினர். இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் தமிழ் இருக்கைக்காக நன்கொடை வழங்கி வருகின்றனர்.
உலகில் உள்ள 20 பெரிய மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று . தமிழ் மொழியானது இந்திய அரசால் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உலகளவில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே நமது பண்டைய தமிழ் இலக்கியங்கள், செய்யுள்கள் மற்றும் சித்த மருத்துவம் ஆகியவற்றிக்கு உலக அங்கீகாரம் வேண்டும் என்றால் உலகப் புகழ்ப் பெற்ற ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை வேண்டும். ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்பதன் மூலம் தமிழ் மொழிக்கு மட்டுமல்லாமல் நமது சித்த மருத்துவத்திற்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும்.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, ஜெயலலிதா அவர்கள் தங்களது தேர்தல் அறிக்கையில், எங்களது அரசு ஆட்சி அமைத்தால் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 10 கோடி நிதி வழங்கப்பபடும் என்று அறிவித்து இருந்தார். அதை நிறைவேற்றும் விதமாக தமிழக அரசு சார்பில் 10 கோடியை தமிழக முதல்வர் வழங்கியது உலகில் பல்வேறுப் பகுதிகளில் வாழும் தமிழ்ச் சொந்தங்களின் இதயத்தில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு அளித்த 10 கோடியை அடுத்து தமிழ் இருக்கைக்காக தேவைப்படும் மொத்த நிதியில் 30 கோடி சேர்ந்துள்ளது. இன்னும் 10 கோடி தேவைப்படுகிறது. நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள், நேரடியாக செலுத்த http://harvardtamilchair.org என்ற இணையதளத்திற்கு சென்று செலுத்தலாம்.