ஹெலிகாப்டர் விபத்தில் 7 இந்திய வீரர்கள் மரணம்.

பரவிய செய்தி
அருணாச்சலப் பிரதேசத்தின் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்களை அட்டைப் பெட்டிகளில் வைத்து கொண்டு வந்துள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
விபத்து நிகழ்ந்தது அதிக உயரத்தில் இருக்கும் தொலைதூரப் பகுதி என்பதால் அங்கு கிடைத்த பொருட்களை வைத்து வீரர்களின் உடல்களை கொண்டு வந்தனர். பின்னர், உரிய இராணுவ மரியாதை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளக்கம்
ஹெலிச்கோப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களை பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டைப் பெட்டிகளில் அடைத்து கொண்டு வரப்பட்ட சம்பவம் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் டவாங் மாவட்டத்தில் அக்டோபர் 6ம் தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான MI-17 V5 ஹெலிகாப்டரில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். திடீரென ஹெலிகோப்டரானது பைலைடின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ஐந்து விமானப்படை வீரர்கள் மற்றும் இரண்டு தரைப்படை வீரர்கள் என 7 பேர் இறந்தனர்.
இச்சம்பவம் அறிந்து இராணுவத்தில் இருந்து மீட்புப் பணியாளர்கள் குழு இறந்த வீரர்களை மீட்கப் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு விரைந்தனர். பின்னர் விபத்து ஏற்பட்ட இடத்தை கண்டறிந்து இறந்த வீரர்களின் உடல்களை மீட்டனர். இறந்த வீரர்களின் உடல்களை பிளாஸ்டிக் பைகள் மற்றும் அட்டை பெட்டிகளால் சுற்றி எடுத்து வரப்பட்டன. அவ்வாறு அட்டை பெட்டிகளில் எடுத்து வரப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் மக்களிடையே கோபத்தைத் தூண்டியது. இறந்த வீரர்களை முறையாக நடத்த தெரியவில்லை என்று பலர் கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், விபத்து நிகழ்ந்த பகுதியானது சாலை இணைப்பு இல்லாத அதிக உயரத்தில் இருக்கும் தொலைதூரப் பகுதி ஆகும். மேலும், மரச் சவப்பெட்டிகளின் எடையை ஹெலிகாப்டர் தாங்காது என்பதால் விபத்து நடந்தப் பகுதியில் கிடைத்த பொருட்களை வைத்து வீரர்களின் உடல்களை கொண்டு வந்துள்ளனர்.
பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேதப்பரிசோதனை செய்தப் பிறகு இராணுவ வீரர்களின் உடல்களை சவப்பெட்டிகளில் வைத்து முழு இராணுவ மரியாதை வழங்கப்பட்டது. அதன் பிறகு வீரர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று இராணுவ அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.