This article is from Jan 06, 2018

அமெரிக்காவில் தோன்றியது வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டா ?

பரவிய செய்தி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வான்வெளியில், வெண்ணிற ஒளி போன்று காட்சியளிக்கும் பறக்கும் தட்டு ஒன்று மிகவேகமாக சென்றுள்ளது. வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டில் சென்ற நிகழ்வை அப்பகுதியை சேர்ந்த மக்கள் நேரில் கண்டுள்ளனர். பறக்கும் தட்டு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மதிப்பீடு

சுருக்கம்

டிசம்பர் 22, 2017-ல் நள்ளிரவில் ஸ்பேஸ் எக்ஸ்(spaceX) என்ற ராக்கெட் நிறுவனத்தின் ” ஃபால்கன் 9 “ என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளி விமானம் போன்று காட்சியளிக்கும் ஃபால்கன் ராக்கெட் செல்லும் வேகத்தில் எஞ்சினில் இருந்து வெளியான நீராவி, உயர்வான பகுதியில் நிலவும் குளிர்நிலை ஆகியவற்றின் கலவையால் வெண்மை நிறத்தில் ஒளி போன்றும், கோள வடிவில் வேற்றுக்கிரக பறக்கும் தட்டு போன்றும் காட்சியளிக்கின்றது.

விளக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஹாவ்தோர்ன் பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ” ஸ்பேஸ் எக்ஸ்(spaceX) “ என அறியப்படும் விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப நிறுவனம் ஓர் விண்வெளி போக்குவரத்து நிறுவனம் ஆகும். 2002 ஆம் ஆண்டு எலான் முஸ்க் என்பவரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஓர் தனியார் வணிக விண்வெளி நிறுவனம் ஆகும்.

பல்வேறு ராக்கெட்களை உருவாக்கியுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அண்மையில் ஓர் ராக்கெட்டை உருவாக்கி விண்ணில் செலுத்தியுள்ளனர்.  டிசம்பர் 22-ம் தேதி மத்திய கலிபோர்னியா பகுதியில் உள்ள வண்டேன்பேர்க் ஏர் போர்ஸ் பேஸ் என்ற ராக்கெட் தளத்தில் இருந்து ” ஃபால்கன் 9 ” விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெடானது, தொலைத் தொடர்பு செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்துவதற்காக அனுப்பட்டது. அவ்வாறு ஏவப்பட்ட ஃபால்கன் செல்லும் வேகத்தில் வெண்மை நிறத்தில் வேற்றுகிரக விண்கலம் போன்று தோன்றிய காட்சியை அப்பகுதியை சேர்ந்த மக்கள் கண்டு வியந்துள்ளனர். அதை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

     ஃபால்கன் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ எலோன் முஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ” வட கொரியாவில் இருந்து அறிந்து கொள்ள இயலாத அணு ஆயுத வேற்றுக்கிரகவாசி வருகிறது என்று கேளிக்கையாகவும், மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் விதத்திலும் பதிவு செய்திருந்தார் “.

” ஃபால்கன் ராக்கெட் செல்லும் காட்சி வேற்றுக்கிரக விண்கலம் போன்று காட்சியளிப்பதற்கு காரணம், ஆகாய விமானத்தின் என்ஜினில் இருந்து திடீரென வெளியாகும் நீராவி, உயரமான வான்பகுதியில் இருக்கும் குளிர்ந்த தட்பவெட்ப நிலையால் விமானம் செல்லும் திசையில் வெண்மையான ஒளி போன்று பின் தொடர்கின்றது. விமானத்தில் இருந்து வெளியாகும் நிராவி மற்றும் குளிர்ந்த வெப்பநிலையின் கலவையால் ராக்கெட்டானது கோள வடிவில் வேற்றுக்கிரக விண்கலன் போன்று பறந்துள்ளது “.

இரிடியம் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 10 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் ஃபால்கன் ராக்கெட் மூலம் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது. ” ஃபால்கன் ராக்கெட் ஏவப்பட்ட பிறகு அந்நிறுவனத்தின் சி.இ.ஒ எலோன் முஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ” தற்போது வெளியான ஃபால்கன் 9 உங்களுக்கு பிடித்திருந்தால், அடுத்த மாதம் வெளியாகும் ஃபால்கன் ஹேவி உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். 3 ராக்கெட் குழுக்கள் ராக்கெட்டின் அடித்தளத்தை மேம்படுத்தி வருகின்றன. வருங்கால சோதனைகளின் மறு பயன்பாட்டிற்காக ஃபால்கன் ஹேவி விண்ணில் செலுத்திய பிறகு பூமிக்கு திரும்பி வரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஃபால்கன் ஹேவில் மூன்று உந்திகளை பயன்படுத்தி உள்ளோம். இது ஃபால்கன் 9 விட இரு மடங்கு செயல்திறன் கொண்டதாக இருக்கும் ” என்று பதிவிட்டுள்ளார் “.

தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களை தாங்கி செல்லும் ராக்கெட்டின் பாதையில் உருவான தோற்றத்தை கண்டு பறக்கும் தட்டு, வேற்றுக்கிரக வாசிகள் என்று தவறான கதைகளை பரப்பியுள்ளனர்.

இவ்வாறு, வேற்றுக்கிரகவாசிகள் பற்றி தவறான செய்திகளை பரப்புவது ஒன்று புதிது அல்லவே. இதே போன்று கடந்த ஜூன் மாதம் மலேசியாவில் வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும் தட்டு சென்றதாகக் கூறி தவறான செய்திகள் வெளியானதை நாம் அனைவரும் அறிவோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader