This article is from Dec 07, 2017

ஆர்.கே.நகரில் வாக்குச்சீட்டு முறையா அல்லது EVM முறையா.

பரவிய செய்தி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 131 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். ஆனால், 64 வேட்பாளர்களுக்கு மேல் சென்றால் வாக்குச்சீட்டு முறை மூலமே தேர்தல் நடத்த முடியும்.

மதிப்பீடு

சுருக்கம்

384 வேட்பாளர்கள் எண்ணிக்கை வரை இடம்பெறக் கூடிய ” M3 வாக்கு இயந்திரத்தை“, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பயன்படுத்த உள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். எனினும், 64 வேட்பாளர்களுக்கு மேல் சென்றால் ” வாக்குச்சீட்டு முறை ” பயன்படுத்தபடும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

விளக்கம்

முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்து ஒரு வருடம் ஆகியும் அவரது தொகுதியான ஆர்.கே.நகரில் இன்னும் இடைத்தேர்தல் நடந்தபாடில்லை. இந்நிலையில், டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து முன்னணி வேட்பாளர்களான மதுசூதனன், மருதுகணேஷ், தினகரன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களான ஜெ.தீபா, நடிகர் விஷால் உள்பட மொத்தம் 131 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதன்பின், வேட்புமனு பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரிகள் ஜெ.தீபா, நடிகர் விஷால் உள்ளிட்ட பலரது வேட்புமனுக்களை நிராகரித்தனர். பல சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டதையடுத்து வேட்பாளர்கள் எண்ணிக்கை 72 ஆக குறைந்தது.

   ” ஓட்டு இயந்திரத்தில் ஒரு பெட்டிக்கு 16 வேட்பாளர்களின் பெயர்கள் வரை சேர்க்கலாம். 63 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா உள்பட மொத்தம் 64 பெயர்கள் இருந்தால் மட்டுமே ஓட்டு இயந்திரத்தைப் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் சென்றால் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படும்”. இப்படி இருக்கையில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 384 வேட்பாளர்கள் எண்ணிக்கை வரை இடம்பெறக் கூடிய M3 வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

எனினும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 64-க்கு மேல் சென்றால் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அறியலாம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், தேர்தல் விதிமுறைப்படி நடைபெறுமா அல்லது தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியது போன்று நடைபெறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader