This article is from Nov 24, 2017

இந்தியாவின் தேசிய மலர் தாமரை இல்லை.

பரவிய செய்தி

இந்தியாவின் தேசிய மலராகத் தாமரையை 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி அங்கீகரிக்கப்பட்டது. தாமரை மலரை ஆன்மீகத்துடனும், தூய்மையுடனும் தொடர்புபடுத்துகின்றனர். ஆகையால், தாமரையானது இந்தியாவின் தேசிய மலராக தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

இந்திய தகவல் அறியும் சட்டத்தின் கீழ், இந்திய தாவரவியல் ஆய்வு மையத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தாமரையானது இந்தியாவின் தேசிய மலர் அல்ல என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

இந்திய சுதந்திரம் அடைந்தது முதல் நமது தேசிய மலர் தாமரை என்று மக்களால் நம்பப்பட்டு வருகின்றது. மேலும், பள்ளி பாடப்புத்தகங்களில் தொடங்கி அனைத்து குறிப்பேடுகளிலும் தாமரை இந்தியாவின் தேசிய மலர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நாம் நினைப்பது போன்று தாமரை இந்தியாவின் தேசிய மலர் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோவை சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வரும் ஐஸ்வர்யா பராஷர் என்பவர், தாமரை இந்தியாவின் தேசிய மலராக அறிவிக்கப்படுள்ளதா? என்பதை அறிய தகவல் அறியும் சட்டத்தின் கீழ், இந்திய தாவரவியல் ஆய்வு மையத்தில் விண்ணபித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஆய்வு மையத்தின் நிர்வாக அதிகாரி தபஸ் குமார் க்ஹோஷ், தாமரை இந்தியாவின் தேசிய மலர் அல்ல. மேலும், இந்தியாவிற்கு தேசிய மலர் என்று எந்தவொரு மலரும் அரசால் அங்கீகரிக்கப்பட்டவில்லை என்று கூறியுள்ளார்.

பள்ளி பாடத்திலும், மற்றவர்கள் கூறியதையும் கேட்டு வந்த ஐஸ்வர்யா தனக்கு எழுந்த சந்தேகத்தை தீர்க்க தகவல் அறியும் சட்டத்தை நாடியதாகக் கூறியுள்ளார். மேலும், இந்திய அரசின் அதிகாரபூர்வமான இணையப் பக்கங்களில் கூட தேசிய மலர் தாமரை என்றே தவறாகக் குறிப்பிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

எனவே, குழப்பங்களை தீர்க்க தாமரையை இந்தியாவின் தேசிய மலராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் அல்லது அவ்வாறு கூறப்பட்ட தவறான தகவல்களை அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பான குழப்பங்களை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றையும் எழுத ஐஸ்வர்யா தீர்மானித்துள்ளார்.

ஆக, நம் பாடப்புத்தகங்களில் இருப்பது போன்று இந்தியாவிற்கு தேசிய மொழியும் இல்லை, தேசிய விளையாட்டும் இல்லை, தற்போது தேசிய மலரும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader