This article is from Feb 01, 2018

இந்தியாவின் 1% பணக்காரர்களிடம் குவிந்துள்ள 73% பணம்!

பரவிய செய்தி

இந்தியாவில் உள்ள ஒரு சதவீத பணக்காரர்களிடம் நாட்டின் 73 சதவீத பணம் குவிந்துள்ளது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

ஆக்ஸ்பார்ம் என்ற அமைப்பின் ஆய்வறிக்கையில், இந்தியாவில் உள்ள செல்வ வளத்தில் 73 சதவீத பணம் ஒரு சதவீத பணக்காரர்களிடம் குவிந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

சர்வதேச பொருளாதார மையத்தின் கூட்டத் தொடர் கூடுவதற்கு முன்பாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வுகள் ஆக்ஸ்பார்ம் என்ற அமைப்பால் நடைபெற்றது. சில சமயங்களில் பொருளாதாரத் கூட்டத் தொடரில் இத்தகைய ஆய்வில் பெறப்படும் தகவல்கள் பற்றி கூட சில நாட்டின் தலைவர்களால் மேற்கோள் காட்டப்படும்.

2018 ஆம் ஆண்டின் சர்வதேச பொருளாதார மையத்தின் கூட்டத் தொடருக்கு முன்பாக ஆக்ஸ்பார்ம் ஆய்வின் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, நைஜீரியா, அமெரிக்கா, மெக்சிக்கோ உள்ளிட்ட 10 நாடுகளில் சராசரியாக 70,000-க்கும் மேற்பட்ட மக்களிடம் இந்த ஆய்வானது நிகழ்த்தப்பட்டது.

அதில், இந்தியாவில் உள்ள 1 சதவீத எண்ணிக்கை கொண்ட பணக்காரர்களிடம், நாட்டின் 73 சதவீத பணம் குவிந்து கிடக்கிறது என்று தெரிவித்துள்ளனர். இது நாட்டில் உள்ள மக்களின் வருவாய் சமநிலை இல்லாததை எடுத்துரைக்கும்படி அமைந்துள்ளது.

கடந்த ஆண்டில் இந்தியாவில் உள்ள 67 கோடி ஏழை மக்களின் வருமானம் வெறும் 1 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் உள்ள 1 சதவீத பணக்காரர்களிடம் 82 சதவீத பணம் குவிந்து உள்ளது. 3.7 பில்லியனுக்கு அதிகமான ஏழை மக்களின் வருமானத்தில் எத்தகைய முன்னேற்றமும் இல்லை.

2010 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் உள்ள பெரும் பணக்காரர்களின் செல்வ வளமானது சராசரியாக ஆண்டிற்கு 13 சதவீதம் உயர்கிறது. ஆனால், சாமானிய மக்களின் வருமானம் சராசரியாக ஆண்டிற்கு 2 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

கடந்த ஆய்வின்படி, இந்தியாவின் மொத்த செல்வ வளத்தில் 58 சதவீத பணம் ஒரு சதவீத பணக்காரர்களிடம் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்திய பணக்காரர்கள் ஒரே ஆண்டில் 15 சதவீதம் வருவாய் முன்னேற்றம் அடைந்திருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

 

இந்த ஆய்வில், இந்தியாவில் உள்ள ஒரு சதவீத செல்வந்தர்களின் செல்வ வளமானது கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 4.89 லட்சம் கோடி அதிகரித்து 20.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இது மத்திய அரசின் 2017-2018-ம் ஆண்டிற்கான பட்ஜெட்க்கு இணையானது என்றும் தெரிவிக்கின்றன. 

இந்தியாவின் தொலைதூர கிராமங்களில் வாழும் 941 மக்களின் குறைந்தபட்ச ஆண்டு வருமானம், பெருநகரத்தின் மிகப்பெரிய நிறுவனத்தில் உச்சபட்ச வருவாய் பெறும் நபரின் ஆண்டு வருமானத்திற்கு இணையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader