This article is from Feb 21, 2018

இந்தியாவில் இனி செல்போன் எண்கள் 13 இலக்கமாக மாறப்போகிறதா ?

பரவிய செய்தி

இனி வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க செல்போன் எண்களை வழங்க உள்ளதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இந்தியாவில் 10 இலக்க எண்ணிற்கு பதிலாக 13 இலக்க செல்போன் எண்கள் பயன்பாட்டில் வர உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஜூலை 1-ம் தேதியில் இருந்து 13 இலக்க எண்கள் கொண்ட M2M சிம் கார்டுகளை வழங்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்திய செல்போன் பயனாளிகள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கூறியுள்ளனர்.

விளக்கம்

இந்தியாவில் தற்போது செல்போன்களுக்கான எண்கள் 10 இலக்கம் கொண்டதாக உள்ளது. அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 10 இலக்க எண்கள் கொண்ட சிம் கார்டுகளையே வழங்கி வருகின்றன.

இந்நிலையில், பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஜூலை மாதத்தில் இருந்து 13 இலக்க எண்கள் கொண்ட சிம் கார்டுகளையே வழங்க உள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் ஏற்கனவே நாட்டில் பயன்பாட்டில் உள்ள செல்போன் எண்களை 13 இலக்க எண்களாக மாற்ற உள்ளதாகவும், மற்ற நிறுவனங்களும் அதை பின்பற்றப் போவதாகவும் சமூக வலைத்தளங்களிலும், இணையத்திலும் செய்திகள் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் அக்டோபர் 18-ம் தேதி முதல் M2M (Machine 2 Machine) பயன்பாட்டாளர்களுக்கு 13 இலக்க கொண்ட எண்களை வழங்குமாறு இந்திய தொலைத்தொடர்புத் துறை(DoT) வழிகாட்டுதல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, M2M 13 இலக்க எண்களை வழங்குவது தொடர்பான செயல்பாடுகளை ஜூலை 1 முதல் தொடங்கலாம் என்றும், இத்தகைய பணிகள் அனைத்தும் டிசம்பர் 31, 2018க்குள் முடிவடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.

M2M ( Machine to Machine) :

M2M  தொழில்நுட்பம், டிவைஸ் மற்றும் சென்சார் இடையேயான தகவல் பரிமாற்றம் செய்வதற்கு மற்றும் இன்டர்நெட் மூலம் செயல்பட கூடிய சாதனங்கள் மற்றும் அமைப்புகள் உடனும் செயல்படுத்த பயன்படுகிறது. M2M பெரும்பாலும் போக்குவரத்து, ஆற்றல், பயன்பாடு, விநியோகம், சுகாதாரம் மற்றும் ஏற்றுமதி துறைகளில் அதிகம் பயன்படுகிறது. உதாரணமாக, எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி, சாலையில் உள்ள சிக்னல்களில் பொருத்தப்பட்ட கேமராவின் மூலம் வாகனங்களின் தகவல்களை சேகரிக்கும் போது தவறேதும் இருந்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பும்.

அரசின் அறிவிப்பை உறுதி செய்த பிஎஸ்என்எல் உயர் அதிகாரி, இதற்கான வழிகாட்டுதல்கள் ஜனவரி 8-ம் தேதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். பயனாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் 13 இலக்க சிம் கார்டு எண்கள் வருவது தொடர்பாக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்ட செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்திய தொலைத்தொடர்புத் துறை நாட்டில் உள்ள 10 இலக்க  M2M எண்களையே 13 இலக்க எண்களாக வழங்க மட்டுமே அறிவுறுத்தியுள்ளது.

ஆக, இந்த 13 இலக்க எண்களால் செல்போன் பயனாளர்களுக்கு எத்தகைய பாதிப்புகளும் இல்லை மற்றும் இந்த எண்கள் மாற்றம் தானியங்கி இயந்திரங்களில் பயன்படும் கார்டுகளுக்கு மட்டுமே என்பதை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader