This article is from Dec 22, 2017

இந்தியாவில் போலியோவை ஒழித்தது மோடியா ?

பரவிய செய்தி

குழந்தைகளை முடமாக்கிய போலி நோயை முழுவதுமாக ஒழித்த நாடு இந்தியா என உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு. தூய்மை இந்தியா கனவு நாயகன் மோடி அவர்களுக்கு நன்றி.

மதிப்பீடு

சுருக்கம்

இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்டது என்று மார்ச் 2014 ஆண்டில் WHO சான்றிதழ் வழங்கியது. ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது 26 மே 2014 ஆண்டு தான்.

விளக்கம்

இந்தியாவில் பல குழந்தைகளை பாதித்த போலியோ நோய் தற்போது முழுவதுமாக ஒழிக்கப்பட்டது. அதற்கு தூய்மை இந்தியா கனவு நாயகன் பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழிசை சௌந்தராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

போலியோ என்னும் இளம்பிள்ளை வாதம் குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் ஒரு அரிய வகை வைரசால் உண்டாகும் நோயாகும். உலக அளவில் போலியோ நோயால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஐந்து வயதுக்கு குறைவானவர்களே. 2001-2011-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவில் போலியோவால் பாதிக்கபட்டவர்கள் 5,185 பேர்.

உலகளவில் போலியோ நோயால் பலர் பாதிக்கப்படுவதை தடுக்க உலக சுகாதார அமைப்பு பல முயற்சிகளை மேற்கொண்டனர். 1995 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் ( WHO ) இயக்குனர் ஜெனரல் போலியோ ஒழிப்பிற்ககான சான்றிதழ் குழு ஒன்றை அமைத்தார். 11 நாடுகளுக்கான போலியோ ஒழிப்பு தேசிய சான்றிதழ் குழுக்கள் 1998-ம் ஆண்டின் இறுதியில் அமைக்கப்பட்டது. ஜனவரி 13, 2011-ம் ஆண்டில் போலியோ ஒழிப்பு பற்றிய அறிக்கையை இந்தியா அரசு வெளியிட்டது.

                                                                  

2012 ஆம் ஆண்டில் முழுவதுமாக போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது. பின்னர் 2014 -ம் ஆண்டில் மார்ச் மாதம் போலியோ இல்லா நாடு என்ற சான்றிதழ் வழங்க முடிவு செய்தனர். இவ்வாறு போலியோ ஒழிப்பு பற்றி இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்தியாவில் முழுவதுமாக போலியோ ஒழிக்கப்பட்டது என்று WHO-வால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு 26 மே 2014-ம் தேதி ஆட்சிக்கு வந்தது  . ஆனால், அதற்கு முன்பாகவே போலியோ நோயானது படிப்படியாகக் குறைக்கப்பட்டு மார்ச் 2014-ல் இந்தியாவில் போலியோ முழுவதும் ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில், போலியோ நோயை முழுவதுமாக ஒழித்ததற்கு பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழிசை சௌந்தராஜன் நன்றிகள் கூறியிருப்பது பொருந்தாத செய்தியாகும். மேலும், இச்செய்திகள் அதிகளவில் பரவியதை அடுத்து பலர் தமிழிசை சௌந்தராஜனுக்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கியதற்காக அவர் தான் போலியோவை ஒழித்தார் என்று புகழாரம் சூட்டுவது கண்டிக்கத்தக்கது ஆகும்

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader