This article is from Nov 29, 2017

இந்திய மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்தின் தரம்-மெர்சல் வசனம்

பரவிய செய்தி

சிறந்த மருத்துவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் இந்தியா முதலிடம், இந்தியாவின் மருத்துவத் தரம் மற்றும் இந்தியாவில் உள்ள தகுதி இல்லாத மருத்துவர்கள் பற்றி மெர்சல் படத்தில் வரும் வசனங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

அயல் நாடுகளுக்கு சிறந்த மருத்துவர்களை அனுப்புவதில் இந்தியாவிற்கு முதல் இடம், மருத்துவத் தரத்தில் இந்தியாவிற்கு 112-வது இடம்.

விளக்கம்

மெர்சல் திரைப்படத்தில் விஜய்-சமந்தா கலந்துரையாடலின் போது இந்தியாவில் உள்ள மருத்துவர்களை பற்றியும், மருத்துவத் தரத்தைப் பற்றியும் பேசப்பட்ட வசனங்கள் இந்தியாவில் உள்ள மருத்துவர்களின் நிலையை தெளிவாக விளக்கியுள்ளது.

தலைச்சிறந்த மருத்துவர்களை 34 வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் இந்தியாவிற்கு முதலிடம் என்றக் கூறுவது உண்மையே. இந்தியாவில் மருத்துவம் பயின்ற பெரும்பாலான மருத்துவர்கள் அயல் நாடுகளில் தங்களது மருத்துவப் பணியைத் தொடர்வதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அயல் நாடுகளில் பயின்று வளர்ந்த நாடுகளின் மருத்துவத்துறையில் பணிபுரிய வருபவர்களில் பெரும்பாலானோர் ஆசிய நாடுகளில் இருந்து வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிகளவில் வருவதாக OECD (THE ORGANISATION FOR ECONOMIC CO-OPERATION AND DEVELOPMENT) அறிக்கை கூறுகிறது.

இவ்வாறு ஒருபுறம் இருக்கையில், சொந்த மக்களுக்கு தரமான மருத்துவம் வழங்குவதில் இந்தியாவிற்கு 112-வது இடத்தைப் பிடித்துள்ளது. உலக நாடுகளின் சுகாதார முறை குறித்து உலக சுகாதார அமைப்பால் வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியா 112-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியல் நாட்டில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவத்தின் தரத்தைப் பற்றி எடுக்கபட்டது ஆகும்.

இந்தியாவின் மருத்துவத் துறையில் உள்ள மருத்துவர்களின் தகுதிப் பற்றிய உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள அலோபதி மருத்துவர்களில் 57.3% பேர் முறையான மருத்துவத் தகுதிப் பெறவில்லை. அதாவது மொத்தம் உள்ள மருத்துவர்களில் பாதி அளவிற்கும் அதிகமானோர் மருத்துவத் தகுதியுடன் இல்லை என்கின்றனர். அதிலும் குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் உள்ள மருத்துவர்களில் 18.8 % மட்டுமே மருத்துவத் தகுதியுடையவர்களா உள்ளனர். இந்திய மருத்துவர்களின் தகுதிப் பற்றி உலக சுகாதார அமைப்பின் அறிக்கை இந்திய மருத்துவத்தில் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொதுசேவை பிரிவில் உள்ள இந்திய மருத்துவர் ஒருவர் உலகில் 43 மில்லியன் மக்கள் தவறான மருத்துவ முறையால் பாதிக்கப்படுவதாகவும் (Medical errors),  அதில் 5.2 மில்லியன் தவறுகள் இந்தியாவில் நடப்பதாகக் கூறியுள்ளார். இந்தியாவில் முறையான மருத்துவ சிகிச்சை வழங்காததால் பலர் இறப்பதை நாம் தினமும் செய்திகளில் படித்து தான் வருகின்றோம்.

இந்தியாவில் மருத்துவம் பயின்ற பெரும்பாலான மருத்துவர்கள் அயல் நாடுகளுக்கு செல்லாமல், தங்களது மண்ணிலேயே மருத்துவத்தை சேவையாகக் கருதி பணியாற்றினால் தரமான மருத்துவமானது அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader