This article is from Mar 06, 2018

இலங்கை தமிழர்களுக்கு 27,000 வீடுகள் கட்டி கொடுத்தவரா மோடி ?

பரவிய செய்தி

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கனடா பிரதமரை தமிழர்களின் பிரதமர் என்று சொல்பவர்கள். யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழர்களுக்காக 27,000 வீடுகள் கட்டி பொங்கல் பரிசாகக் கொடுத்தவர் மோடி என்பதை மறந்து விட்டார்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

இந்திய அரசு மற்றும் இலங்கை அரசுடன் இணைந்து போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடுகளை கட்டி வழங்குவது தொடர்பான திட்டத்தை ஜூன் 2010-ல் அறிவித்தனர்.  அப்போது இருந்தது காங்கிரஸ் அரசாங்கம் . இத்திட்டத்தின் ஒரு பகுதி தான் 2015-ல் மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்ட வீடுகள்.

விளக்கம்

தமிழீழ விடுதலை புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற போரில் இலங்கை தமிழ் மக்களின் வாழ்விடங்கள் பெரும் பாதிப்படைந்தன. வசிக்க இடமின்றி வாழந்து வரும் மக்களுக்கு அவர்களது பகுதியிலேயே புத்துணர்வு மிக்க வீடுகளை கட்டி வழங்கும் திட்டத்தை இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு செயல்படுத்தி வருகிறது.

2010 ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்காக வீடுகளை அமைத்து தரும் Indian Housing project-ஐ அறிவித்து, அதற்கான பணிகளை ஆரம்பித்தனர். 

இந்தியாவின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், Pilot Project(phase1) மூலம் இலங்கை வடக்கு மாகாணப் பகுதிகளில் 53 கோடி மதிப்பில் 1000  வீடுகள் கட்டும் பணிகள்  2011-ல் தொடங்கி 2013-ல் முடிவடைந்தன. அப்போது நடந்தது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் .

மேலும், IHP திட்டத்தின் கீழ் (phase2), தீர்மானிக்கபட்ட 41,950 வீடுகளில் 40, 617 வீடுகள் புத்துணர்வுடன் கட்டப்பட்டது. அதேபோல் சேதமடைந்த 1000 வீடுகளும் சரி செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்திய பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி இலங்கைக்கு 2015 மார்ச் மாதத்தில் இரண்டு நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தில், இந்திய பகுதிக்கு அருகில் உள்ள தலைமன்னார் பகுதியில் மறுக்கட்டமைப்பு செய்யப்பட்ட இரயில் பாதையில் கொடி அசைத்து இரயிலை தொடங்கி வைத்தார்.

பின்னர், தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்தில் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு 27,000 வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உடன் இருந்தார். தமிழ் மக்கள் புதிதாக வழங்கப்பட்ட வீடுகளில் குடியேறுவதற்கு முன்பாக பால் காய்ச்சி தொடங்கப்படும் பாரம்பரிய நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தொடங்கி வைத்துள்ளார்.

ஆக, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு 2011-ல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தில் உருவான வீடுகளை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். மேலும், அவர் தன் கைகளால் பால் காய்ச்சி தொடங்கியதை பொங்கல் பரிசு என்று தவறாகவும் சித்தரிக்கின்றனர். காங்கிரஸ் அரசு மீது கடும் குற்றசாட்டுகளை ஈழ விவகாரமாக வைத்து வருகின்றனர் உலகத் தமிழர்கள் . அந்த நேரத்தில் தான் இந்த திட்டத்தை மன்மோகன் சிங் அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader