This article is from Feb 21, 2018

ஊட்டியில் அணைக் கட்டினால் காவிரி பிரச்சனை தீருமா ?

பரவிய செய்தி

கர்நாடகாவிற்கு தலைவலி ஆரம்பம் ! ஊட்டியில் அணைக்கட்ட கோரி திரண்டு வரும் இளைஞர்கள்..! தேசிய புரட்சியாக உருவெடுப்பதால் பதறும் அரசு..! நாம் ஊட்டியில் இருந்து செல்லும் தண்ணீரின் வழித்தடத்தை மறித்து அணையைக் கட்டினால் போதும். கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இது தான். ஊட்டியில் அணைக் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இனியாவது தமிழக அரசு புரிந்து கொண்டு நமது நீர் நமக்கே என்கிற முறையில் ஊட்டியில் அணைக்கட்டி விவசாயிகளின் வாழ்வில் செழிப்பை உண்டாக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர். இதை தயவு செய்து பகிருங்கள்… காட்டுத் தீயாக பரவட்டும்.

மதிப்பீடு

சுருக்கம்

நீலகிரியில் பாய்ந்தோடும் மோயாறு, கர்நாடகா எல்லையோரப் பகுதியில் பாய்ந்து மீண்டும் தமிழகத்திற்குள்ளேயே திரும்பி பவானிசாகர் நீர்த்தேக்கங்களில் சேர்கின்றது.

விளக்கம்

தமிழகத்தின் நீலகிரி மலைபகுதியில் உருவாகும் மோயாற்றின் ஒரு பகுதி பைக்காரா அணை பகுதிக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிற்கு சென்று மீண்டும் ஒகேனக்கல் வழியாக தமிழகம் வருகிறது. எனவே, காவிரி ஆற்றின் நீரை தர மறுக்கும் கர்நாடகாவிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஊட்டில் அணைக் கட்டி கர்நாடகாவிற்கு செல்லும் தமிழக ஆற்றின் நீரை தடுக்க வேண்டும் என்று செய்திகள் சமூக வலைத்தளங்களில் பெருமளவில் வைரலாகி வருகின்றது.

ஊட்டியில் அணைக் கட்ட வேண்டும் என்று பரவி வரும் செய்திகள் குறித்து Tamil nadu Green Movement துணை செயலாளர் எஸ்.ஜெயச்சந்திரன் கூறுகையில், “ மோயாறு நீலகிரியின் நிலக்கோட்டை மற்றும் கூடலூர் பகுதியில் தொடங்கி, முதுமலை புலிகள் வனப்பகுதியில் ஒதுங்கி, தெங்குமரஹாடா அடிவாரத்தில் பாய்ந்து இறுதியாக பவானிசாகர் நீர்த்தேக்கங்களில் நிறைவடைகிறது. 

மோயாறு பவானி ஆற்றின் கிளை நதியாகும். மரங்களடர்ந்த பகுதியில் இருந்து கீழே பாயும் மோயாறு நீலகிரியின் எல்லைப்பகுதியிலும், கர்நாடகாவின் எல்லையோரப் பகுதியிலும் பாய்கிறது. ஆனாலும், மோயாறு கர்நாடகா பகுதிக்குள் செல்லாமல் மீண்டும் தமிழகத்திற்குள்ளேயே திரும்பி பவானிசாகர் நீர்த்தேக்கங்களில் வந்தடைகிறது என்று கூறியுள்ளார். 

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் கூறியதாவது, “ மோயாறு பற்றி சமூக வலைத்தளத்தில் பரவிய செய்திகளை கேள்விப்பட்டேன், யாரோ ஒருவர் சர்ச்சையான நேரத்தில் தவறான நோக்கத்துடன் திசைத் திருப்பி சமூகத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர். மோயாறு நீலகிரி எல்லையின் வடக்கு மற்றும் வடகிழக்கு மலைப்பகுதியில் பாய்கின்றது என்று நன்றாகவே அறிவோம். எனவே, மக்கள் இது போன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஊட்டியில் அணைக்கட்ட வேண்டும் என்று பரவும் செய்திகள் வதந்தி.! இது பூலோக அமைப்புக்கு பொருந்தாத செய்தி என்று இயற்கை ஆர்வலர் பியுஷ் மனுஷ் கூறியுள்ளார்.

மோயாறு கர்நாடகாவின் எல்லைப்பகுதியில் பாய்ந்து மீண்டும் தமிழகத்தின் பவானிசாகர் நீர்த்தேக்கங்களில் வந்தடைவதை கூகுள் வரைப்படத்தில் காணலாம். எனவே, மீண்டும் இச்செய்தியை மக்கள் பகிராமல் இருக்க அனைவரிடமும் இப்பதிவை கொண்டு செல்ல உதவுங்கள்.

காவிரி ஆற்றின் நீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு பற்றிய தகவல்களை காண- காவிரி நீர் விவகாரம் வரலாறு இறுதி தீர்ப்பும் 

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader