This article is from Dec 15, 2017

ஏஞ்சலினாவாக 50 அறுவை சிகிச்சை செய்த பெண்ணின் நிலை.

பரவிய செய்தி

ஏஞ்சலினா ஜோலியாக ஆசைப்பட்டு 50 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ததன் விளைவால் இளம் பெண்ணின் முகமே கோரமாக மாறியுள்ளது. இப்பெண்ணின் புகைப்படங்கள் ஊடகங்கள், இணையத்தில் அதிகளவில் வைரலாகி வருகின்றன.

மதிப்பீடு

சுருக்கம்

ஈரான் நாட்டைச் சேர்ந்த சஹார் டபார் என்ற இளம்பெண்ணின் முகம் கோரமானதாக காட்சியளிப்பதற்கு காரணம், புதுவிதமான மேக் அப் மற்றும் ஃபோட்டோஷாப் ஆகியவற்றின் கலவையால் உருவாக்கப்பட்டது ஆகும். எனினும், பல படங்களில் இருப்பது  என்னுடைய முகமே அல்ல என்று அப்பெண்ணே கூறியுள்ளார்.

விளக்கம்

“ சஹார் டபார் ” என்ற 19 வயது ஈரானிய இளம்பெண் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். அப்பெண் ஏஞ்சலினா ஜோலி போன்று ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு கடந்த சில மாதங்களாக 50 முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

   அவர் செய்து கொண்ட அறுவை சிகிச்சைகளின் விளைவால் அப்பெண்ணின் முகமே முதிர்ச்சியான தோற்றத்திற்கு மாறியது. அப்பெண் தனது வித்தியாசமான முகத்தின் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்படங்கள் இணையத்தில் உலகளவில் வைரலாகியது. அதுமட்டுமின்றி அனைத்து ஊடகங்களிலும் வெளியாகின. எனினும், பரவிய பல படங்கள் ஃபோட்டோஷாப் மூலம் மாற்றப்பட்டவை என்றும் கூறி வந்தனர்.

ஊடகங்களில் வெளியான செய்தியை உண்மையென்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவை அனைத்தும் கட்டுக்கதைகள் என்று தற்போது நிரூபணமாகியுள்ளது. ஆம், உண்மையில் சஹார் டபார் எந்தவொரு அறுவை சிகிச்சையும் செய்துக் கொள்ளவில்லை என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.

சஹார் டபார் ரஷ்யன் நியூஸ் அவுட்லேட் ஸ்புட்னிக்கு கூறியதாவது, ” இம்மாதியான கனவுகளை தூண்டும் புகைப்படங்கள் தனது மகிழ்ச்சிக்கு வழியாக அமைகிறது. நான் இப்போது ஏஞ்சலினா போன்று இருப்பதாக கூறலாம். ஆனால் நான் நானாக இருப்பதே மகிழ்ச்சியளிக்கிறது. யாரோ ஒருவர் என் இலக்காக இருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்”.

     அறுவை சிகிச்சையின்றி எவ்வாறு முகம் இவ்வாறு மாறியது என்று பலரும் ஆச்சரியத்துடன் எழுப்பும் வினாவிற்கு உரிய விடையானது, உண்மையில் இந்த தோற்றமானது புதுவிதமான மேக் அப் மற்றும் ஃபோட்டோஷாப் ஆகியவற்றின் கலவையால் உருவாக்கியது ஆகும். டபார் ஃபோட்டோஷாப் தொழில்நுட்பத்தையும் நன்றாக பயன்படுத்தியுள்ளார். இருப்பினும் சில படங்கள் வேறு சிலரால் பல மென்பொருட்களின் மூலம் அதிகம் மாற்றப்பட்டவை.

இது குறித்து டபார் வெளியிட்ட பதிவில், “ இது என்னுடைய உண்மையான முகம் அல்ல என்பது என் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும் என்று கூறியுள்ளார் ”.

ஆக, அறுவை சிகிச்சையால் பெண்ணின் முகம் கோரமாக மாறியதாகப் பரவியச் செய்தி உண்மையில்லை என்றாலும், இத்தகைய திறமைகள் கொண்ட பெண்ணிற்கு ஒப்பனை தொழிலில் நல்ல எதிர்காலம் உள்ளது என்று மட்டும் நன்றாக தெரிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader