This article is from Nov 16, 2017

குப்பைத் தொட்டியைத் தொட்டதால் கர்ப்பிணி பெண் கொலை.

பரவிய செய்தி

குப்பைத் தொட்டியை தொட்டதால் தீட்டு. உத்திரப்பிரதேசத்தில் அடித்து கொல்லப்பட்ட கர்ப்பிணி பெண்.

மதிப்பீடு

சுருக்கம்

உயர் சாதிப் பெண்ணின் வீட்டு குப்பைத் தொட்டியை தொட்டதால் தீட்டு ஏற்பட்டதாக கூறி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியதால் இறந்துள்ளார்.

விளக்கம்

 இந்தியா பல்வேறு சாதி, மத  அமைப்புகளை கொண்ட நாடு ஆகும், இன்றைய காலக்கட்டத்திலும் கூட  உயர் சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாடுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் நாட்டில் பல்வேறு இடங்களில் சாதிய சண்டைகளும், தாக்குதல்களும் நடைபெற்று வருவதை நாம் அனைவரும் அறிந்ததே. அதில் ஒரு கொடுமையான சம்பவம் தான் உத்திரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் கேய்டால்பூர் பன்சோலி கிராமத்தில் 3500 மக்கள் வசிக்கின்றனர். இதில் 30% பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இக்கிராமத்தின் வீடுகளில் உள்ள குப்பைகளை அகற்றுவது தொடர்பான பணிகளை செய்வது தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த மக்களே. இந்நிலையில், அக்டோபர் 15-ம் தேதி எட்டு மாதக் கர்ப்பிணியான சாவித்திரி தேவி எப்பொழுதும் போல் கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரித்து வந்துள்ளார். அவ்வாறு குப்பைகளை சேகரிக்கும் போது, அஞ்சு என்ற பெண்ணின் குப்பைத் தொட்டியைத் தொட்டுக் குப்பையை எடுத்துள்ளார்.

இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த அஞ்சு, மேல் சாதி வீட்டு தொட்டியை தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான சாவித்திரி  தொட்டுத் தீட்டு ஏற்படுத்தி விட்டதாகக் கூறி கடுமையாக தாக்கியுள்ளார். அஞ்சுவுடன் சேர்ந்து அவரது மகன் ரோஹித்தும் சேர்ந்து அப்பெண்ணைத் தாக்கியுள்ளனர். கர்ப்பிணி பெண் என்றும் கூடப் பார்க்காமல் அம்மாவும், மகனும் சேர்ந்து தடியால் தாக்கியதால் அப்பெண் மயங்கி விழுந்துள்ளார். பலத்த காயமடைந்த கர்ப்பிணிப் பெண்ணை அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், ஆறு நாட்கள் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த சாவித்திரி திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது வயற்றில் இருந்த குழந்தையும் பிறப்பதற்கு முன்பே இறந்துள்ளது.

குப்பைத் தொட்டியை தொட்டதற்காக கர்ப்பிணி பெண் என்றும் கூட பார்க்காமல் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

நம் தேசம் விஞ்ஞானரீதியில் பல முன்னேற்றங்களை பெற்றிருந்தாலும், சாதிய பாகுபாட்டில் இருந்து இன்றளவும் மீளாமல் உள்ளது. தினம் தினம் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. நம் தேசத்தில் என்று சமத்துவம் பிறக்கின்றதோ அன்றே சாதியக் கொடுமைகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader