This article is from Jan 30, 2018

கேரளாவில் மனிதக் கழிவுகளை சுத்தம் செய்ய ரோபோக்கள் அறிமுகம்.

பரவிய செய்தி

கேரளாவில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதற்கு மாற்று வழியாக ரோபோக்களை பயன்படுத்த உள்ளது கேரளா அரசு.

மதிப்பீடு

சுருக்கம்

Genrobotic என்ற நிறுவனத்துடன் இணைந்து மனிதக் கழிவுகளை ரோபோட்க்களை கொண்டு சுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கேரளா அரசு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளது.

விளக்கம்

இன்றைய நவீன உலகத்தில் கூட இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவல நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலும், வறுமையிலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் இத்தகைய வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் துயரத்தில் இருந்து நீங்குவதற்கு ஏதேனும் வழி கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டு இருக்கும் வேளையில், இதற்காக கேரளாவில் புதியதோர் வழி பிறந்துள்ளது.

கேரளாவில் பாதாள சாக்கடையில் உள்ள அசுத்தங்களை ரோபோக்களை கொண்டு சுத்தம் செய்வதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் புரிந்துணர்வு(MOU) ஒப்பந்தத்தில் கேரளாவின் குடிநீர் ஆணையம்(KWA) மற்றும் கேரளா தொடக்க பணி(KSUM) ஆகியவை கையெழுத்திட்டுள்ளனர்.

இதற்கான கேரளா அரசின் அறிக்கையில், பாதாள சாக்கடைகளை ரோபோக்கள் உதவியுடன் சுத்தம் செய்வதற்கான தொழில்நுட்பம் மற்றும் தேவையான பொருட்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்குவதாகக் கூறி கேரளா முதல்வர் பிரனாயி விஜயன் தலைமையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

கேரளா அரசு மார்ச் மாதம் நடக்கவிருக்கும் அட்டுகள் பொங்கல் விழாவில் திருவனந்தபுரத்தில் இத்தகைய ரோபோக்களை சோதனை செய்து பார்க்க உள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த Genrobotic என்ற நிறுவனம் செயல்படுத்திய இந்த ரோபோக்கு “ Bandicoot ” என பெயரிட்டுள்ளனர். இதில் நான்கு மூட்டுகள் மற்றும் பார்ப்பதற்கு சிலந்தி போல் இருக்கும், இதில் வாளியும் இணைக்கப்பட்டுள்ளன. அடியில் உள்ள சாக்கடை வாயிற் துளையினுள் சென்று தோண்டி எடுக்கப்பட்ட குவியல்களை, தூக்குவதற்கு முன்பாக குவியல்கள் வாளிகளில் சேமிக்கப்பட்டு அகற்றப்படும். இதில் Wi-Fi மற்றும் ப்ளுடூத் தொகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. 

Genrobotic நிறுவனம் தங்களது ரோபோக்களை ஆறு மாதங்களில் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களும் இதற்காக விவரங்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

பொருளாதார பின்தங்கிய நிலை மற்றும் சாதி அடிப்படையில் 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி, தென்னிந்தியாவில் உள்ள 16,362 மலம் அள்ளும் தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து வந்தவர்கள். இன்றும் இந்த நிலை அதிகரித்தே செல்கிறது.

நவீன இந்தியாவில் மலம் அள்ளுவதால் பலர் நோய்வாய்ப்பட்டு இறப்பது தவறு என்று எடுத்து கூறும் இந்திய சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தபோதிலும், நாட்டில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலநிலை தொடர்கிறது.

அத்தகைய அவலநிலையை மாற்றும் புதியதோர் வழியாக கேரளாவில் ரோபோக்கள் கொண்டு சுத்தம் செய்யும் முறை அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader