This article is from Nov 16, 2017

சாம்சங் பாதுகாப்பு ட்ரக் சாலை பாதுகாப்பிற்கான புரட்சி.

பரவிய செய்தி

சாம்சங் பாதுகாப்பு ட்ரக்கின் பின்புறத்தில் உள்ள திரையில் சாலையின் எதிர்புறத்தில் வரும் வாகனங்களை காணலாம், இதன் மூலம் பின்னே வரும் வாகனங்கள் பாதுகாப்பாக ட்ரக்கை கடந்து செல்லலாம்.

மதிப்பீடு

சுருக்கம்

சாலை பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட சாம்சங் பாதுகாப்பு ட்ரக் தொழில்நுட்பம் ஒரு மாதிரி வடிவம் ஆகும். இந்த தொழில்நுட்பம் இன்னும் விற்பனைக்கு வரவில்லை.

விளக்கம்

   உலகளவில் நாளுக்கு நாள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் விபத்துகளை கட்டுப்படுத்த முடியவில்லை. சாலை விபத்துகள் பற்றி பல விழிப்புணர்வுகளை எற்படுத்தினாலும் கவனக் குறைவினால் விபத்துகள் தொடர்கின்றன.

சாலை போக்குவரத்து விபத்துகளில் உலகளவில் அதிக புள்ளி விவரங்களை கொண்ட நாடாக அர்ஜென்டினா உள்ளது. அதற்கு முக்கிய காரணமே, அந்நாட்டில் உள்ள பெரும்பாலான சாலைகள் இருவழி சாலைகள் ஆகும். இருவழி சாலைகளில் செல்லும் போது வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லும் தருணத்தில் விபத்துகள் அதிகம் நிகழ்வதாகவும், அதிலும் ட்ரக் போன்ற கனரக வாகனங்களை முந்தி செல்லும் பொழுது வாகனங்கள் அதிகம் விபத்துக்குள்ளாகின்றன என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சாலையில் வாகனத்தில் செல்லும் போது முன் செல்லும் ட்ரக் போன்ற கனரக வாகனங்களுக்கு முன்னே என்ன நடக்கின்றது என்று அறிவது கடினம். இதனால் பெருமளவில் விபத்துகள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு சாம்சங் நிறுவனம் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது. பாதுகாப்பு அம்சத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த ட்ரக்கின் முன்பகுதியில் ஒயர்லஸ் கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். ட்ரக்கின் பின்புறத்தில் நான்கு சிறிய திரைகளை ஒன்றிணைத்து ஒரு பெரிய திரை பொருத்தப்பட்டிருக்கும், முன்னே நடக்கும் அனைத்தும் நிகழ்வுகளும் திரையில் காண்பிக்கப்படும். இதை ட்ரக்கிற்கு பின்னால் வரும் வாகனங்கள் காண்பதால், வாகனங்களை கடந்து செல்ல ஏதுவாக அமைந்துள்ளது. இரவு நேரங்களில் கூட முன்னே நடப்பவைகளை திரையில் காணலாம்.

இதனால் இரவு நேரத்தில் சாலையை கடக்கும் விலங்குகள் மீது வாகனங்கள் மோதி ஏற்படும் விபத்துகளை குறைக்கலாம். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாம்சங் நிறுவனம் மாதிரி சோதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும் உள்ளூர் B2Bவாடிக்கையாளரிடமும் சேர்ந்து ஒரு சோதனையை நடத்தியது.

ஆனால், இந்த சாம்சங் பாதுகாப்பு தொழில்நுட்பம் இன்னும் சோதனை கட்டத்தில் மட்டுமே உள்ளது. தேசிய நெறிமுறைகளுக்கு ஏற்ப தேவையான சோதனைகளையும், அனுமதியையும் பெற்ற பிறகே விற்பனைக்கு வரும். இந்த தொழில்நுட்ப முயற்சி பல மக்களின் உயிரைக் காப்பாற்றும் விதத்தில் அமைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader