This article is from Feb 21, 2018

ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்காத இந்திய பிரதமர்.. கனடா ஊடகங்கள் கண்டனம்.

பரவிய செய்தி

வெளிநாட்டு பிரதமர்கள் வந்தால் கட்டி தழுவி வரவேற்கும் பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்க செல்லவில்லை.. அடுத்த நிலை அமைச்சரும் செல்லவில்லை.. அவரை அவமானப்படுத்தியதாக கனடா ஊடகங்கள் காட்டம்.

மதிப்பீடு

சுருக்கம்

அரசு முறை பயணமாக இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி செல்லவில்லை. கனடா பிரதமரை வேளாண்மைத்துறை இணையமைச்சர் கஜேந்திர சிங் வரவேற்க சென்றுள்ளார்.

விளக்கம்

இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக வரும் வெளிநாட்டு தலைவர்களை அரசு விதிமுறைகளையும் மீறி நேரில் சென்று வரவேற்கும் வழக்கத்தை கொண்டவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அதுமட்டுமின்றி தலைவர்களை கட்டியணைத்தும் உற்சாக வரவேற்பு அளிப்பார்.

இந்நிலையில், இந்தியாவிற்கு முதல் முறையாக அரசு பயணமாக தன் குடும்பத்தினருடன் வந்த கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்க பிரதமர் மோடி செல்லவில்லை. மேலும், அவருக்கு அடுத்தப்படியாக இருக்கும் மத்திய அமைச்சர்களும் செல்லவில்லை. அவர்களுக்கு பதிலாக வேளாண்மைத்துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் கனடா பிரதமரை வரவேற்க சென்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் ஆகியோரை நேரில் விமான நிலையத்திற்கே சென்று கட்டித்தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி.

இப்படி இருக்கையில், இந்தியா வந்த கனடா பிரதமரை இரண்டு நாட்கள் கடந்தும் பிரதமர் மோடி சந்திக்கவில்லை. மேலும், பிப்ரவரி 19 அன்று பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்திற்கு சென்ற போதும் பார்க்க செல்லவில்லை.

பிப்ரவரி 18-ம் தேதியன்று, உலக அதிசயமான தாஜ்மஹாலுக்கு ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற போது உத்திரப்பிரதேச முதல்வரும் சந்திப்பதை தவிர்த்து உள்ளார். இதற்கு கனடா நாட்டு ஊடகங்கள் கண்டனம் தெரிவித்து செய்திகள் வெளியிட்டு உள்ளன.

இச்சம்பவம் குறித்து பொருளாதார வல்லுனரும், பத்திரிகை எழுத்தாளருமான விவேக் தெஹேஜியா கூறுகையில், “ கனடா பிரதமரை ஒரு கீழ்நிலை அமைச்சரை வரவேற்க அனுப்பியது, நிச்சயம் அவரை அவமதிக்கும் செயல் ஆகும். இதற்கு காரணம் ஜஸ்டின் ட்ரூடோ அரசில் இருப்பவர்கள் காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடன் இருப்பதே!

காலிஸ்தான் இயக்கம் என்பது சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்களுக்கு இந்தியாவில் இருக்கும் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் என சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை ஒன்றிணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு உருவாக்க அமைக்கப்பட்ட இயக்கம் ஆகும்.

மேலும், கனடாவில் வாழும் சீக்கியர்கள் அதிகளவில் ஜஸ்டின் ட்ரூடோ கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும், சில அமைச்சர்கள் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் நெருக்கமானவர்கள் ” என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 2016-ல் இந்தியாவிற்கு வந்த கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜனை “ காலிஸ்தான் ஆதரவாளர் ” என்று கூறி பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் சந்திக்க மறுத்தார். எனினும், இந்தியாவின் பஞ்சாபில் சீக்கியர்களின் தனிநாடு அமைவதற்கு கனடா அதரவு கொடுப்பதாகக் கூறும் குற்றச்சாட்டுக்கு ஹர்ஜித் மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கியர்கள் விவகாரத்தில் இந்தியா-கனடா இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதலை ஒரு இனப்படுகொலை என கனடா நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு தீர்மானமாக நிறைவேற்றினார்கள்.

எனினும், கனடா பிரதமரை அவமதிக்கவில்லை என்றும் விதிமுறைகளை மட்டுமே பின்பற்றியுள்ளனர். சில நாட்டின் தலைவர்களை நேரில் சென்று வரவேற்றதற்காக அனைவரையும் வரவேற்க அவசியமில்லை என்று கூறியுள்ளார் கனடா நாட்டின் முன்னாள் இந்திய தூதர் விஷ்ணு பிரகாஷ். பிப்ரவரி 23-ம் தேதி டெல்லியில் ஜஸ்டின் ட்ரூடோவும், பிரதமர் மோடியும் சந்திக்க உள்ளனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader