This article is from Nov 16, 2017

நீட் தேர்விற்கு சி.எம்.சி கல்லூரி எதிர்ப்பா ?

பரவிய செய்தி

நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சேர்க்கையை நிறுத்தியது சி.எம்.சி.

மதிப்பீடு

சுருக்கம்

நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை நடைபெறும் என்று சி.எம்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விளக்கம்

நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. வலைதளங்களில் நீட் தேர்விற்கு எதிராக அதிகளவில் படங்கள், மீம்ஸ்கள் மற்றும்  வீடியோக்களும் பகிரப்படுகின்றன. இப்படி இருக்கையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி மருத்துவப் படிப்பிற்கான மாணவர்ச் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது  என்றுக் கூறி சமூக வலைதளங்களில் செய்திகள் அதிகமாக பரவி வருகின்றன. ஆனால் கல்லூரிப் பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.

 நீட் தேர்வில் சி.எம்.சி கல்லூரி பற்றி வந்த தகவல்கள் உண்மையல்ல என்றும், நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை மட்டுமே கல்லூரியின் சேர்க்கைக்கு அழைக்க இருப்பதாக கூறியுள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 300 மாணவர்களை மட்டுமே கல்லூரி நடத்தும் கலந்தாய்வுக்கு அழைப்போம் என்று தெரிவித்துள்ளனர். மேலும்,  அவர்களுக்கு கிராமப்புறப்பகுதிகளில் பணி செய்யக்கூடிய மனநிலையும், தலைமைப் பண்பும், மருத்துவராகக்கூடிய இயல்பும் இருக்கின்றதா என்று கல்லூரி தேர்வு செய்யும். இதில் தேர்வானவர்களுக்கு மட்டுமே கல்லூரியில் சீட் கிடைக்கும். இதுநாள் வரை இது போன்ற முறையை தான் கடைபிடித்து வந்துள்ளனர்.

 ஆனால் தனியார் கல்லூரிகள் தனியாக கலந்தாய்வு நடத்தக் கூடாது என்று மருத்துவ கவுன்சில் தடை செய்துள்ளது. இதை எதிர்த்து சி.எம்.சி கல்லூரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 11 தேதி அன்று வர உள்ளது. அதற்கு பிறகே கல்லூரியில் 99 எம்.பி.பி.எஸ் சீட்டுகள். 61 சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புக்கான சேர்க்கைகள் நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகம் கூறி உள்ளது. இதை தவறாக புரிந்துக் கொண்டு நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.எம்.சி மருத்துவப் படிப்பிற்கான மாணவர்  சேர்க்கையை நிறுத்தியுள்ளது என்று வதந்தியை பரப்பியுள்ளனர்.

 நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை தான் சேர்க்கைக்கு அழைப்போம் என்று தெளிவாகக் கூறியுள்ளவர்களை, நீட் தேர்விற்கு எதிரானவர்கள் என்று தவறாக நினைத்து விட்டார்களே.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader