This article is from Feb 19, 2018

பிப்ரவரி 14 பகத்சிங் தூக்கிலிடப்பட்ட தினமா ?

பரவிய செய்தி

பெரும்பாலும் அனைவருக்கும் பிப்ரவரி 14 என்றால் காதலர் தினம் என்றே நினைவுக்கு வரும். ஆனால் 14.02.1931 அன்று லாகூரில் பகத்சிங் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

மதிப்பீடு

சுருக்கம்

மாவீரர் பகத்சிங் லாகூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 23.03.1931-ம் தேதியன்று இரவு 7.15 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்.

விளக்கம்

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ம் தேதியன்று காதலர் தினத்தை கொண்டாடி வருவது வழக்கம். அன்றைய தினத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகள் போராடுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், காதலர் தினமான பிப்ரவரி 14-ஐ சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் உடன் தொடர்புப்படுத்தி ஓர் செய்தியானது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

நாம் அனைவருக்கும் பிப்ரவரி 14 என்றால் காதலர் தினம் என்றே நினைவுக்கு வரும். ஆனால், 14.02.1931 அன்று அதிகாலை லாகூரில் வீரமிக்க பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிட்டு கொல்லப்பட்டார்கள். ஆனால், நாம் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்கிறோம். நீங்கள் இந்தியனாக இருந்தால் இந்த செய்தியை பகிர்ந்து அவர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்துங்கள். இவ்வாறு கூறி இச்செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டிஷ்க்கு எதிராக 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதியன்று டில்லியில் உள்ள சட்டசபை வளாகத்தில் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் வெடிகுண்டுகளை வீசினார்கள். எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காக ஆளில்லாத பகுதியில் குண்டுகளை வீசி விட்டு தாமாகவே சரணடைந்துள்ளனர். இத்தகைய வீரர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட 300 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் தண்டனையாக மூவரும் இறக்கும் வரை தூக்கிலிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.   

இதையடுத்து, பிரிட்டிஷ்காரர்கள் தண்டனையை அறிவித்த தேதிக்கு முன்பாகவே பகத்சிங் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றினர். மாவீரர் பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் லாகூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 23.03.1931-ம் தேதியன்று இரவு 7.15 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

பகத்சிங் பெயரில் உள்ள விக்கிபீடியா பக்கத்தில், பகத்சிங் தூக்கிலிடப்பட்ட தேதியை பிப்ரவரி 13, 14 என்று பல முறை சிலர் மாற்றியுள்ளனர். இதை இணைய காழ்ப்புணர்ச்சி என்று விக்கிபீடியா நிர்வாகிகள் கூறியுள்ளனர். பகத்சிங் தூக்கிலிடப்பட்ட 23.03.1931 தேதியை பிப்ரவரி 14 என்று பலமுறை மாற்றியுள்ளதாக விக்கிபீடியாவின் நிர்வாகி செரியன் தெரிவித்துள்ளார்.

ஆக, பிப்ரவரி 14 காதலர் தினத்தை இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட தினம் என்று கூறி வன்முறையை தூண்டும் நோக்கத்தில் வதந்திகளை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader