This article is from Dec 29, 2017

மத்திய அரசு திட்டங்களின் விளம்பர செலவு ரூ.3755 கோடி.

பரவிய செய்தி

பிரதமர் மோடி அவர்களின் விளம்பர செலவிற்காக ரூ.3755 கோடி செலவிடப்பட்டுள்ளது. நாட்டில் பல கிராமங்களில் உள்ள மக்களுக்கு அடிப்படைவசதிகள் கூட இல்லாத நிலையில் பிரதமரின் வெற்று விளம்பர செலவு மட்டும் இத்தனை கோடி என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற 2014 ஆண்டிலிருந்து 2017-ம் அக்டோபர் வரை மத்திய அரசு திட்டங்களின் விளம்பரத்திற்காக ரூ.3755 கோடியை மத்திய அரசு செலவழித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலானது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

விளக்கம்

நொய்டாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்வீர் தன்வர் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளித்த மனுவின் கீழ் அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது:-

” ஏப்ரல் 2014  முதல் அக்டோபர் 2017 வரையில் மின்னணு, அச்சு ஊடகங்கள் மற்றும் வெளிப்புற விளம்பரங்களுக்காக ரூ. 37,54,06,23,616 செலவிடப்பட்டு உள்ளது. மின்னணு ஊடகங்களான, சமூக வானொலி, டிஜிட்டல் சினிமா, இன்டர்நெட், தூர்தர்ஷன், எஸ்.எம்.எஸ் மற்றும் தொலைக்காட்சிகள் போன்றவற்றில விளம்பரங்களுக்கு ரூபாய் 1,656 கோடி செலவிடப்பட்டுள்ளது. அரசாங்கம் அச்சு ஊடகங்களுக்கு ரூ. 1,698 கோடிக்கும் அதிகமாக செலவழித்து உள்ளனர். வெளிப்புற விளம்பரங்களான சுவரொட்டிகள், புத்தகங்கள் மற்றும் நாள்காட்டி போன்றவற்றிக்கு ரூபாய் 399 கோடிக்கும் அதிகமாக செலவழிக்கப்பட்டு உள்ளது. சில முக்கிய அமைச்சகங்கள் மற்றும் அரசின் முக்கிய திட்டங்கள் ஆகியவற்றிக்கு ஒதுக்கப்படும் வருடாந்திர வரவு செலவுத் திட்டங்களை விட விளம்பரத்திற்காக செலவழித்த தொகையானது அதிகம் ஆகும் “.

     சென்ற மூன்று ஆண்டுகளில் “ மாசு தடுப்புக்கு “ அரசாங்கம் ரூபாய் 56.8 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. 2016-ம் ஆண்டில் தன்வரால் மத்திய அரசிடம் பெறப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அறிக்கையில், “ ஜூன் 2014 மற்றும் ஆகஸ்ட் 2016-க்குள்    மத்திய அரசு விளம்பரத்திற்காக ரூ. 1,100 கோடியை செலவழித்ததாக கூறப்பட்டு இருந்தது. இது இணையம், தொலைக்காட்சி மற்றும் பிற மின்னணு ஊடகங்களுக்கான செலவு தொகை மட்டுமே. இதில் அச்சு ஊடகங்கள் மற்றும் வெளிப்புற விளம்பரத்திற்கான செலவுகள் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“ தூய்மை இந்தியா திட்டம் ” குறித்து லக்னோவைச் சேர்ந்த சஞ்சய் சர்மா என்பவர் ஆர்.டி.ஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு, 2014-2015 இடைப்பட்ட ஆண்டுகளில் மட்டும் தூய்மை இந்தியா திட்டத்தின் விளம்பரத்திற்காக ரூ.94 கோடியை மத்திய அரசு செலவிட்டதாக சுகாதார அமைச்சகம் பதில் அளித்திருந்தது. மேலும், இத்திட்டம் முழுமைபெற 2 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு வரை பிரதமரின் “ மன் கீ பாத் ” என்ற வானொலி நிகழ்ச்சியின் அச்சு ஊடகங்களின் விளம்பர செலவு ரூ. 8.5 கோடியாகும்.

நாட்டின் பல குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார திட்டங்களுக்கு செலவழிக்கும் தொகையை விட இவர்களின் விளம்பரச் செலவுகள் அதிகம் என்பது மனதிற்கு வேதனை அளிக்கின்றது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader