This article is from Dec 27, 2017

மலேசியாவில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி.

பரவிய செய்தி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை முதல் முறையாக மலேசியாவில் ஆஸ்ட்ரோ நிறுவனம் நடத்த உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 7-ம் தேதி ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற உள்ளதாக சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனத்தின் இந்திய நிகழ்ச்சிகளின் நிர்வாகக் குழுமத் தலைவர் ராஜாமணி செல்லமுத்து கூறியுள்ளார்.

விளக்கம்

தமிழர்களின் பாரம்பரியத்தை உலகறியச் செய்யும் விதமாக ஜல்லிக்கட்டு போட்டியானது முதல் முறையாக மலேசியாவில் நடைபெற உள்ளது. ஜனவரி 7-ம் தேதி நடக்க உள்ள அப்போட்டிக்கான ஏற்பாடுகளை மலேசியாவை சேர்ந்த ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் செய்து வருகின்றது.

இது குறித்து அந்நிறுவனத்தின் இந்திய நிகழ்ச்சிகளின் நிர்வாகக் குழுமத் தலைவர் ராஜாமணி செல்லமுத்து கூறிகையில், ஜல்லிக்கட்டை பிரபலப்படுத்தும் எண்ணத்தில் ஜனவரி 7-ம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள சிலாங்கூர் தர்ப் களப் வளாகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியானது நடக்க உள்ளது. இந்த போட்டியில் மலேசியாவில் உள்ள 20 காளைகள் பங்கு கொள்கின்றன. காளைகளை அடக்க தமிழகத்தில் பயிற்சி பெற்ற 25 மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொள்வர்.

5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து போட்டியை காணும் வகையில் திடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை ஆஸ்ட்ரோ உலகம் என்ற இணையதள தொலைகாட்சியில் நேரலையாக பார்க்க இயலும். போட்டியை தொடங்கி வைக்க தமிழக வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜனையும், நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு நடிகர் சமுத்திரகனி மற்றும் பரணி ஆகியோருக்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத் தலைவர் கூறும்போது, கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டத்தை போராட்டத்தை தொடர்ந்து, கிராமபுறங்களில் மட்டுமின்றி நகரத்தில் உள்ள இளைஞர்கள் மத்திலும் ஜல்லிக்கட்டு மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. எனினும், ஜல்லிக்கட்டு விளையாட்டானது உலகம் முழுவதும் பிரபலம் அடையச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தை கடந்து முதல் முறையாக மலேசியாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவிருப்பது, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி மலேசியா வாழ் தமிழர்களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader