This article is from Feb 23, 2018

மல்லையாவை மிஞ்சிய நீரவ்மோடி.. மக்கள் பணம் நிலை என்ன !

பரவிய செய்தி

குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிகழ்த்திய நிதி முறைகேடு அம்பலம்.

மதிப்பீடு

சுருக்கம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,360 கோடி அளவிற்கு முறையற்ற பணப் பரிவர்த்தனை மற்றும் நிதி மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி.

விளக்கம்

பிப்ரவரி 14-ம் தேதி, சுமார் 11,360 கோடிக்கு அளவிற்கு முறையற்ற பணப் பரிவர்த்தனை மற்றும் நிதி மோசடியானது தங்கள் வங்கியில் நிகழ்ந்துள்ளது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஹாங்காங்கில் உள்ள இந்திய வங்கிகளான ஆக்சிஸ் மற்றும் அலகாபாத் வங்கிகளின் மூலம் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு அதிகளவில் கடனை வழங்கும் அதிகாரத்தை மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி சட்ட விரோதமாக கொடுத்துள்ளது.

நீரவ் மோடியின் நிதி மோசடி:

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் கோகுல்நாத் ஷெட்டி மற்றும் மனோஜ் ஹனுமந்த் காரத் என்பவர்கள் “ லெட்டர் ஆஃப் அண்டர்டேக்கிங் (LoU) என்னும் வெளிநாடுகளில் இருந்து பெரும் குறுகிய காலக் கடனை போலியான ஆவணங்கள் மூலமும், வங்கியின் கவனத்திற்கு வராமலும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கியதற்காக அந்நிறுவனத்தின் பங்குதாரர்களான நீரவ் மோடி, நிஷால் மோடி, அமில் நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி மற்றும் வங்கி ஊழியர்கள் ஆகியோர் மீது வழக்கு தொடருமாறு சிபிஐ-யிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது.

இது தொடர்பாக நீரவ் மோடி மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் மீதும் மத்திய அமலாக்கப் பிரிவு மோசடி வழக்கை பதிவு செய்துள்ளது.

  • நீரவ் மோடியின் நிதி மோசடி 2011 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்குள் நடைபெற்றது.
  • வங்கி ஊழியர்கள் 11,000 கோடி அளவிற்கு நடைபெற்ற முறைகேடான பணப் பரிவர்த்தனையை முறையாக கணக்கில் தெரிவிக்காமல் கடனையும் வாரி வழங்கியுள்ளனர்.
  • நீரவ் மோடியின் மீதான வழக்குகளின் விளைவால் நடத்தப்பட்ட சோதனையில் நிரவ் மோடிக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்பிலான வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2016-ல் நீரவ் மோடிக்கு சொந்தமான இரு வேறு நிறுவனங்களின் நகைகளின் சரக்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் கணக்கில் வராமல் நடக்க முயன்ற கடத்தலை கண்டறிந்தது வருவாய் உளவுத்துறையின் தலைமையகம் (DRI), விசாரணைக்கு பிறகு ரூ.5.6 கோடி அபராதத்துடன் ரூ.48.2 கோடி செலுத்தப்பட்டது. 

ஜூலை 26, 2016-ல் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஹரி பிரசாத் பிரதமர் அலுவலகத்திற்கு (PMO) சோக்ஸியின் கீதாஞ்சலி கெம்ஸ் பிரான்ஷிஸ் நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளார். 

எனினும், இது தொடர்பான வழக்குகள் மகாராஷ்டிரா ROC க்கு மாற்றப்பட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரண்டு, மூன்று மாதங்களுக்கு பிறகு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறி செய்தி வந்தது என்று பிரசாத் தெரிவித்துள்ளார்.

அரசியல் தொடர்பு :

இந்திய வங்கித் துறையில் நிகழ்ந்த மிகப்பெரிய நிதி மோசடி சம்பவம் இதுவே. அரசியல் ஆதரவு இல்லாமல் இத்தகைய மோசடியை செய்திருக்க இயலாது என்று பலரும் குற்றம்சாற்றியுள்ளனர். இந்நிலையில், இத்தகைய மோசடிக்கு காரணம் முன்னாள் காங்கிரஸ் ஆட்சி என்று பாஜகவும், இதற்கு பாஜகவின் பங்கு உள்ளது காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். 2016-ம் ஆண்டிலேயே தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால் அப்போதே இது தலைப்பு செய்தி. இது விஜய் மல்லையா செய்ததது போன்றது என்று குறிப்பிட்டே பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டடுள்ளது. 2017 இல் தான் அதிக அளவில் இந்த முறைகேடு நடந்துள்ளது . 2011 ஆண்டு முதல் நடைபெற்றதாக கூறப்பட்டாலும் புகார் வந்ததும் நடவடிக்கை எடுத்து இருந்தால் பெருமளவு தடுத்திருக்கலாம்​​​​

காங்கிரஸின் கேள்விகள் :

  • சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடியுடன் நிரவ் மோடி என்ன செய்து கொண்டிருந்தார்.
  • இத்தகைய முறைகேடுகள் குறித்து பிரதமருக்கு 2016-ன் ஜூலை மாதமே தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு ஏன் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • பிரதமர் மோடியின் நிர்வாகத்தில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியில் மோசடி நடந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு ?
  • வங்கி அமைப்பையும் மீறி எவ்வாறு இத்தகைய முறைகேடு நடைபெற்றது. அப்படியென்றால் யாரோ அதிகாரம் மிக்கவர் நிரவ் மோடியை பாதுகாக்கிறார்கள் என்றே அர்த்தம்.
  • மோசடியை கண்டறியும் வழிமுறைகள் எப்படி முறையாக செயல்படாமல் இருந்தது என்று காங்கிரஸ் தனது கேள்விகளை எழுப்பியுள்ளது.

மத்திய அரசு விளக்கம் :

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மத்திய அரசின் சார்பாக விளக்கம் அளித்துள்ளார்.

  • இதுவரை நிரவ் மோடிக்கு சொந்தமான 1,300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.
  • நிரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.
  • நிரவ் மோடியை தேடும் பணிக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • பிரதமர் மோடியுடன் டாவோஸ் மாநாட்டிற்கு சென்ற தொழிலதிபர்கள் குழுவில் நிரவ் மோடி இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது ஒரு புது நவீன ஊழல் என்று தான் சொல்ல வேண்டும். LoU, நேரடியாக கடன் கொடுக்காமல் வெளிநாட்டு வங்கிகளுக்கு நீங்கள் கொடுத்து விடுங்கள் அதற்கு நங்கள் பொறுப்பு என்று மட்டும் சொல்லி விட்டால் balance sheet-ல் ஏதும் தெரிய போவதில்லை. ஆக, அதிகாரிகள் இதை கையாண்ட விதம் நுணுக்கமான தவறைச் செய்யும் யுக்தி. 2011-ம் ஆண்டு முதல் 2017 வரை சத்தமின்றி நடைபெற்ற இந்த ஊழல் மக்கள் பணத்தை வெகுவாக சுரண்டி இருக்கிறது. அரசாங்கங்கள் கண்விழித்து இவற்றை போன்று வேறு வங்கிகளில் நடைபெற்றிருக்கின்றனவா என்று சோதிக்கும் நேரம். நீரவ் மோடியோ விஜய் மல்லையாவோ செய்கிற தவறு, தெருவோர குப்பனும் சுப்பனும் பாதிப்படைகிறான் என்று உணர்ந்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader