1 ரூபாய் நோட்டில் இந்தி மொழியே இல்லை.

பரவிய செய்தி
1917 ல் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசால் அச்சடிக்கப்பட்ட 1 ரூபாய் நோட்டில் எட்டு மொழிகள் மட்டுமே உள்ளன. அதில் இந்தி மொழி இடம்பெறவில்லை.
மதிப்பீடு
சுருக்கம்
இந்தியாவில் அதிகம் பயன்படுத்திய எட்டு மொழிகள் மட்டுமே 1917களில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றன.
விளக்கம்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போது 1917 ஆம் ஆண்டுகளில் அரசால் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் தாள் என்று கூறி சில படமானது சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த படங்கள் பிரபலமடைய காரணம், அந்த ரூபாய் தாளில் தமிழ் உள்ளிட்ட எட்டு மொழிகள் மட்டுமே இடம்பெற்றிருப்பது. மேலும் அதில் இந்தி மொழியானது இடம்பெறவில்லை என்பதால் தான்.
ஆம், பிரிட்டிஷ் காலனித்துவ ஆதிக்கத்தின் போது இந்தியாவில் சில மொழிகள் மட்டுமே அரசால் அங்கீகரிக்கப்பட்டன. எனவே அத்தகைய மொழிகளை அரசு அலுவலங்களிலும், ரூபாய் நோட்டுகளிலும் அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தி வந்தனர். 1917 ஆம் ஆண்டில் வெளியான 1ரூபாய் தாளில் உருது, கெய்தி, பெங்காலி, பர்மிஸ், தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும் குஜராத்தி போன்ற எட்டு மொழிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இந்த எட்டு மொழிகளில் ஒரு ரூபாய் என்று அந்த தாளில் எழுதப்பட்டிருக்கும். அன்றைய காலக்கட்டத்தில் குறுப்பிட்ட மொழிகள் மட்டுமே அரசால் அங்கீகாரம் பெற்றன என்பது இதிலிருந்து தெரியவருகிறது.
ஆனால், ஒரு ரூபாய் தாளில் இரண்டாவதாக இடம்பெற்ற மொழியானது இந்தி மொழி என்றுக் கூறிப் பலர் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர். அவர்கள் கூறுவது போல் இரண்டாவதாக இடம்பெற்ற மொழியானது இந்தி மொழி அல்ல, அது கெய்தி மொழியாகும். 16 ஆம் நூற்றாண்டு முதல் 20 ம் நூற்றாண்டு வரை அதிகளவில் பயன்பாட்டில் இருந்த மொழி கெய்தி மொழி ஆகும். இம்மொழியானது பல மொழிகளுகளை எழுதுவதற்கு பயன்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் வடமேற்கு இந்தியாவின் அரசு அலுவலங்கள் மற்றும் நீதிமன்றங்களில் அதிகாரப்பூர்வ எழுத்து வடிவமாக கெய்தி அங்கீகரிக்கப்பட்டது. எனினும், இருபதாம் நூற்றாண்டில் தேவநாகரி மற்றும் பிற மொழிகளால் அதிகளவில் மாற்றப்பட்டது. இருப்பினும், சில கிராமப்புறங்களில் எழுதப்படும் கடிதங்களில் இம்மொழியானது பயன்பாட்டில் உள்ளது.
மேலும், இந்தி மொழியானது இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகே ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டன. 1953 ஆம் ஆண்டுகளுக்கு பிறகே இந்தி மொழியானது பெரும்பாலும் இந்திய ரூபாய் நோட்டுகளில் இடம்பெற துவங்கின என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் அதிகளவில் பேசப்படும் இந்தி மொழியானது இந்தியாவின் அலுவல் மொழியாக உள்ளது தவிர தேசிய மொழியாக அல்ல.