This article is from Nov 30, 2017

1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் இளைஞர்களால் மீட்பு.

பரவிய செய்தி

புதுக்கோட்டை அருகே சமூக வலைதளத்தின் மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து செடி, கொடிகளை அகற்றி 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை மீட்டுள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

புதுக்கோட்டை அன்னவாசல் பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தக் கோவிலை மீட்டெடுக்க வாட்அப் மற்றும் முகநூல் மூலம் ஒன்றிணைந்து களப்பணியை ஆற்றியுள்ளனர்.

விளக்கம்

ஜல்லிக்கட்டு உரிமை எழுச்சிப் போராட்டத்திற்குப் பிறகு சமூக வலைதளமானது இளைஞர்களை ஒன்றிணைக்கும் கருவியாகஅமைந்து வருகிறது. இவ்வாறு சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள் ஓர் புரதான சிவன் கோவிலை மீட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வயலோகம் பகுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த “அகத்தீஸ்வரமுடையார் விஸ்வநாதர் கோவில்” என்ற பழமையானக் கோவில் பாழடைந்த நிலையில் உள்ளது. எனவே இக்கோவிலை மீட்டெடுத்து சீரமைக்க வாட்அப் மற்றும் முகநூல் பக்கங்களில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது.

 

  சமூக வலைதளங்களில் அப்பகுதியைச் சேர்ந்த நண்பர்களால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்று செப்டம்பர் 29-ம் தேதியன்று, வயலோகம்கிராமத்தைச் சேர்ந்தவர்கள், புதுச்சேரியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து வந்த இளைஞர்கள் என 60 பேர் ஒன்றிணைந்தனர்.

இவ்வாறு ஒன்றிணைந்தவர்கள் சிதைந்தக் கோவிலைச் சுற்றிப் படர்ந்து இருந்த புதர்களைச் சுத்தம் செய்தனர். இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாதப் பணியில் அக்கோவிலைச் சுற்றி இருந்த செடி, கொடி, மண்மேடுகளை அகற்றியுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து நடைபெற்ற சீரமைப்புப் பணியால் கோவிலானது மீட்கப்பட்டுள்ளது.

கோவிலின் சீரமைப்பிற்கு பிறகு அங்குள்ள கல்வெட்டுகளை ஆராய்ந்ததில், அக்கோவிலானது 1000 ஆண்டுகள் பழமையானவை என்பது உறுதியானது. மேலும் இக்கோவிலில், மூன்றாம் குலோத்துங்கன் சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன் மன்னர்கள் காலத்தில் திருப்பணிகள் செய்ததாகப் அறிய முடிகிறது.

   கோவிலின் அனைத்துப் பகுதிகளும் சிதைவடைந்து உள்ளது என்றும், கோவிலில் கண்டெக்கப்பட்ட பல சிலைகள் சிதைவடையும் நிலையில் இருப்பதால் அவற்றை தனித்தனியே பாதுகாத்து வைத்திருப்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். மேலும், இந்து அறநிலையத் துறையானதுஇச்சிவன் கோவிலை அழகிய வேலைபாடுகளுடன் மறுசீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

சமூக வலைதளத்தின் உதவியால் இத்தகைய நிகழ்வு நிகழ்ந்திருப்பது அனைவரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஓர் முன்னுதாரணமாகவும் அமைத்துள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader