திருச்செந்தூர் கோயிலில் ‘ரசீது கொடுக்காமல்’ 1000ரூ வசூலிப்பு எனப் பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி
1000 ருபாய் இருந்தா உள்ளே போங்க இல்லைன்னா திரும்பி போங்க.? டிக்கெட்டும் கிடையாது, ரசீதும் கிடையாது! என்ன கணக்கு? யாருக்கு பணம் போவுது? யாருக்கும் இது பற்றி தெரியவில்லை! கையில காசு – கண்ணுல கந்தசாமி ! ஏமிரா இதி ? முருகா இது என்ன கொடுமை? ஆட்சி! பக்தர்களிடம் கொள்ளை அடிக்கும் திராவிடமாடல்..
மதிப்பீடு
விளக்கம்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கடந்த நவம்பர் 13 அன்று தொடங்கியுள்ள நிலையில், அங்கு வரும் பக்தர்களிடம் 1000 ரூபாய் வசூலிப்பதாகவும், அதற்கு எந்தவிதமான ரசீதும் வழங்கப்படவில்லை என்று கூறியும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினர் மற்றும் அதிமுகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் அந்த வீடியோவில் மூன்று பேர் கொண்ட கோயில் நிர்வாகிகள் குழு ஒன்று, திருச்செந்தூர் கோயிலின் உள்ளே முருகன் சன்னதிக்கு செல்லும் பக்தர்களிடம் பணம் வசூலிப்பதையும் காண முடிகிறது.
1000 ருபாய் இருந்தா உள்ளே போங்க இல்லைன்னா திரும்பி போங்க.? டிக்கெட்டும் கிடையாது, ரசீதும் கிடையாது! என்ன கணக்கு? யாருக்கு பணம் போவுது?
No one knows! 😯😳
கையில காசு – கண்ணுல
கந்தசாமி ! ஏமிரா இதி ?
முருகா இது என்ன கொடுமை? ஆட்சி! பக்தர்களிடம்
கொள்ளை அடிக்கும்#திராவிடமாடல் pic.twitter.com/xXzYvMcWmS— Dr SHRAVAN BOHRA (@shravan_bohra) November 17, 2023
*👆1,000 ருபாய் இருந்தா உள்ளே போங்க. இல்லைன்னா திரும்பி போங்க….!!? கொடுக்குற ரூ.1000 க்கு டிக்கெட்டும் கிடையாது, ரசீதும் கிடையாது! என்ன கணக்கு? யாருக்கு பணம் போவுது? No one knows!😮😯😳 கையில காசு – கண்ணுல கந்தசாமி! ஏமிரா இதி? முருகா இது என்ன கொடுமை…….!!???? pic.twitter.com/PBYsh5MD44
— SATHYA (@SATHYA34729298) November 17, 2023
உண்மை என்ன ?
திருச்செந்தூர் கோயிலில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியதையடுத்து அக்கோயில் செயல் அலுவலர் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
அந்த அறிக்கையில் “திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு தரிசன கட்டணம் ரூ.100 ஆக இருந்தது ரூ.1000/-ஆக உயர்வு செய்யப்பட்டுள்ளதென வெளியிடப்பட்ட செய்தி தவறான செய்தியாகும்.
பார்வை 3-ல் காணும் ஆணையர் உத்தரவில் தற்போது நடைமுறையில் உள்ள 100/- கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி 2023-ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழாவிற்கு மட்டும் விரைவு தரிசன கட்டணச்சீட்டாக 12.11.2023 முதல் 19.11.2023 வரையிலான எட்டு தினங்களுக்கு மட்டும் நபர் ஒன்றுக்கு ரூ.1000/- நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையிலேயே தான் இன்று கந்தசஷ்டி திருவிழாவின் முதலாம் திருநாள்(13.11.2023)ல் 100/- கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி விரைவு தரசனக் கட்டணம் ரூ.1000/-க்கு தனி தரிசன வரிசையில் தான் பக்தர்களை அனுமதிக்கப்பட்டது என்ற விபரம் பணிந்து தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் இந்த ரூ.1000 கட்டணமானது 2023 நவம்பரில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி 8 நாட்களுக்கு வசூலிக்கப்படுகிறது என்பதையும், மற்ற விழா கால கட்டணங்கள் 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படியே வசூலிக்கப்படுகிறது என்பதையும் அறிய முடிகிறது.
மேலும் பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை ஆய்வு செய்து பார்த்ததில், அங்கு கோவில் நிர்வாகிகள் மூன்று பேர் பணம் வசூல் செய்ய நின்று கொண்டிருந்ததைக் காண முடிந்தது. அதில் நடுவில் இருக்கும் நபர் பக்தர்களிடம் பணம் வாங்குவதையும், அதற்கு அடுத்ததாக பழுப்பு நிற சட்டை அணிந்து நிற்கும் நபர் ரசீது வழங்குவதையும் வீடியோவை மெதுவாக இயக்கிப் (Slow Motion) பார்த்ததில் உறுதிசெய்ய முடிந்தது. எனவே கோவிலில் சிறப்பு தரிசன கட்டணமாக 1000 ரூ வசூலிப்பதற்கு ரசீது வழங்கப்படவில்லை என்பது தவறான தகவலாகும்.
மேலும் படிக்க: திருச்செந்தூர் கோயிலில் திடீர் கட்டண உயர்வு எனத் தவறாகச் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !
இதற்கு முன்பும், திருசெந்தூரில் திடீர் கட்டண உயர்வு ஏற்பட்டதாகவும், அங்கு கந்த சஷ்டி கவசம் படிக்க தடை விதிக்கப்பட்டதாகவும் கூறி தவறான செய்திகள் பரவின. அது குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: திருச்செந்தூர் கோயிலில் ‘கந்த சஷ்டி கவசம்’ படிக்க தடை விதித்ததாகப் பொய் பரப்பும் நடிகர் ரவி !
முடிவு:
நம் தேடலில், திருச்செந்தூர் கோயிலில் ரசீது கொடுக்காமல் பக்தர்களிடம் 1000 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பரவும் தகவல்கள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.