100 ரூபாயில் புற்றுநோயை தடுக்கும் கை மருந்து என பரவும் தவறான ஃபேஸ்புக் பதிவு !

பரவிய செய்தி
இந்தச் சிகிச்சையைக் கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும், சிறந்த மருத்துவரும், பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டுபிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். சோற்றுக் கற்றாழை 400 கிராம், சுத்தமான தேன் 500 கிராம், Whisky (or) Brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக). தயாரிப்பு முறை – சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது. மருந்தை உட்கொள்ளும் விதம் – இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ண வேண்டும்.ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ள வேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும். பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
மதிப்பீடு
விளக்கம்
வெறும் 100 ரூபாயில் புற்றுநோயைக் குணப்படுத்தும் கை மருந்து தயாரிக்கும் முறை என நீண்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை பார்க்க முடிந்தது. அதே தகவல் கடந்த 2017-ம் ஆண்டிலேயே யூடியூப் உள்பட சமூக வலைதளங்களில் பரவிக் கிடக்கிறது.
உண்மை என்ன ?
புற்றுநோய்க்கு கற்றாழை, தேன், ஆல்கஹால் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கும் மருந்தை பிரேசில் மருத்துவரும், பாதிரியாருமான Fr Romano Zago என்பவர் கண்டறிந்ததாக பரவும் தகவல் குறித்து தேடிப் பார்க்கையில், ” Cancer Can be Cured ” எனும் தலைப்பில் அவர் எழுதிய புத்தகம் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது என அறிய முடிந்தது.
2019 டிசம்பர் 19-ம் தேதி SaintMax Media எனும் யூடியூப் சேனலில் Fr Romano Zago உடைய புத்தகத்தை அடிப்படையாக வைத்து செய்முறை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஆனால், இந்த மருந்து புற்றுநோயை குணப்படுத்தியதாக உலக சுகாதார அமைப்பிடம் அல்லது அந்த நாட்டின் மருத்துவக் கழகம் அங்கீகரித்ததாகவோ, ஆதாரப்பூர்வமாகவோ தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. புற்றுநோய் போன்ற நோய்களுக்கு இப்படியான தகவல்களை கண்மூடித்தனமாக நம்பி பரப்புவது, முயற்சித்து பார்ப்பது ஆபத்தையே விளைவிக்கும்.
இதுதொடர்பாக மருத்துவர் பிரவீனை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய போது, ” இதைப் பற்றி நான் கேள்விப்படுவது இதுவே முதல் முறை. எனவே கருத்து தெரிவிக்கும் முன் விரிவாக தேடிப் பார்க்க விரும்பினேன். பிராந்திய அடிப்படையிலான குறிப்புகள் மற்றும் இயற்கை குறிப்புகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட நிகழ்வு சார்ந்த வழக்குகள் உலகெங்கிலும் பல உள்ளன. இந்தியாவிலும் சித்த மற்றும் ஆயுர்வேதத்தைப் போலவே உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு வகையானவை பின்பற்றப்படுகின்றன.
இந்த செய்தி பாதிரியார் ரோமானோ ஜாகோவை அடிப்படையாகக் கொண்டது. அவர் ஒரு கத்தோலிக்க பாதிரியார். அவர் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என ஓர் புத்தகத்தை எழுதினார். அதில் இந்த செய்முறையை குறிப்பிடுகிறார் மற்றும் பிரேசிலின் பூர்வீக மக்களிடம் இருந்து கிடைத்த குறிப்புகள் என எழுதி இருக்கிறார். இதன் மூலம் பல நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததாகவும், குணமடைந்ததாகவும் மேற்கோள்காட்டி புத்தகத்தில் கூறியுள்ளார்.
ஆனால், இந்த செய்முறையை பயன்படுத்துவது குறித்து எந்த அறிவியல் ஆய்வறிக்கையும், சரியான ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. பல இணையதளங்களில் ஒரே தகவல் காணப்படுகின்றன. அவற்றில் ஒரு இணையதளத்தின் பொறுப்பு துறப்பில், இது எஃப்டிஏ மூலம் அங்கீகரிக்கப்படவில்லை மற்றும் புற்றுநோயைக் கண்டறிய அல்லது சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது எனக் குறிப்பிட்டு உள்ளார்கள். கூகுள் புக் மூலம் தேடியபோது எனக்கு ஒரு விமர்சனம் கிடைத்தது. புத்தகத்தின் 113-ம் பக்கத்தில் கிறிஸ்டோபர் (இந்த செய்முறையைப் பயன்படுத்தி சிகிச்சை பெற்றார்) என்பவர் குறித்து குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அவரது உறவினர் ஒருவர் இது ஒரு போலியானது என ரெவியூவில் கூறியுள்ளார்.
எனவே இவை அனைத்தும் புற்றுநோயைக் குணப்படுத்துவதில் நிரூபிக்கப்பட்ட விசயங்கள் அல்ல. மேலும், அனைத்து புற்றுநோய்களும் சமமானவை அல்ல. ஒவ்வொரு புற்றுநோயின் தோற்றத்தையும், சிகிச்சையையும் தீர்மானிக்க அறிவியல் ஆய்வுகள் இன்றளவும் நடந்து கொண்டிருக்கின்றன. எதிர்காலத்தில் நமக்கு ஒரு முன்னேற்றம் கிடைக்கக்கூடும் ” எனத் தெரிவித்து உள்ளார்.
புற்றுநோய் போன்ற நோய்களுக்கு முகநூலில் பரவும் தகவல்களை நம்பி பகிர்வது சரியல்ல. இதுபோன்ற ஏராளமான ஆதாரமற்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் குவிந்து கிடக்கின்றன என்பதை தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.
முடிவு :
நம் தேடலில், வெறும் 100 ரூபாயில் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்து எனப் பரப்பப்படும் செய்முறை அறிவியல்ரீதியாக மற்றும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படாதவை என அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.