100 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக பரவும் புகைப்படங்கள்.. உண்மை என்ன ?

பரவிய செய்தி
101 ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற ஒரு கால சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
மதிப்பீடு
விளக்கம்
கடந்த ஆண்டில் கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கி இன்றளவும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், 101 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற நிலையில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என விதவிதமாக மாஸ்க் அணிந்து இருக்கும் சில புகைப்படங்கள் அடங்கிய பதிவு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
1918-20 காலத்தில் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளு பெருந்தொற்றுடன் தொடர்புப்படுத்தி சில தொடர்பில்லா புகைப்படங்களும் இணைக்கப்பட்டு உள்ளன. அதைப் பற்றி விரிவாக காண்போம்.
புகைப்படம் 1 :
கூம்பு வடிவில் முகம் முழுவதையும் மறைக்கும்படி மாட்டி இருக்கும் பிளாஸ்டிக் ஆனது ஸ்பானிஸ் ஃப்ளு தொற்றின் போது உபயோகப்படுத்தியது அல்ல. 1939ம் ஆண்டு கனடாவின் மான்ட்ரியலில் பனிப்புயல் காரணமாக பெண்கள் முகத்திற்கு பயன்படுத்திய பிளாஸ்டிக் கவசம் என countryliving மற்றும் flickr தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
புகைப்படம் 2:
இந்த புகைப்படம் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் 1953ம் ஆண்டில் எடுக்கப்பட்டது. புகைப்படத்தில் இருக்கும் மெரியல் புஷ்(இடது) ரூத் நியூயர் ஆகியோரால் பயன்படுத்தப்பட்ட போர் உபரி வாயுத் தொப்பிகள். ” AIR POLLUTION 1953 ” எனும் தலைப்பில் இப்புகைப்படத்தை apimages தளம் வெளியிட்டு இருக்கிறது.
புகைப்படம் 3 :
மாடர்ன் உடையில் முகத்தில் மாஸ்க் அணிந்து செல்லும் பெண்களின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 1913ம் ஆண்டில் லேடீஸ் ஃபேஷன் எனும் தலைப்பில் இப்புகைப்படம் புகைப்பட விற்பனை தளமான alamy-ல் வெளியாகி இருக்கிறது.
பிற புகைப்படங்கள் :
மீதமுள்ள புகைப்படங்கள் ஸ்பானிஷ் ஃப்ளு சமயத்தில் எடுக்கப்பட்டவை என சில இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், 100 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் இதேபோன்ற நிலையில் வாழ்ந்துள்ளதாக பரப்பப்பட்ட புகைப்படத் தொகுப்பில் ஸ்பானிஷ் ஃப்ளு தொற்றுக்கு தொடர்பில்லாத சில புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளதை கண்டறிய முடிந்தது.
ஸ்பானிஷ் ஃப்ளுவிற்கு தொடர்பில்லாத புகைப்படங்களே வைரலாகும் பதிவுகளில் முதன்மையாகவும், வீடியோக்களிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.