10-ம் கி.பி யிலேயே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியவர்கள் தமிழர்கள்!

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் 10-ம் நூற்றாண்டிலேயே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

மதிப்பீடு

சுருக்கம்

கங்கை கொண்டான் என்ற பகுதியில் சித்தாறு அருகில் உள்ள மண்டபத்தில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அதில், பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

விளக்கம்

சென்னையை மையமாகக் கொண்ட தென்னகத் தொல்லியல் துறை ஆய்வு நடுவத்தின் தலைவர் மற்றும் முனைவர் பிரியா கிருஷ்ணன், அவரது குழுவினர் மற்றும் தொல்லியல் ஆர்வலர் வினோத் ஆகியோர் திருநெல்வேலியில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

Advertisement

இதில், திருநெல்வேலி மாவட்டத்தின் கங்கை கொண்டான் பகுதியில் கைலாசநாதர் கோவிலுக்கு எதிரே ஓடும் சித்தாறு அருகில் உள்ள மண்டபத்தில் 10-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான தமிழ் வட்டெழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுகள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கபெற்ற கல்வெட்டுகள் குறித்த பல்வேறு தகவல்களை முனைவர் பிரியா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சித்தாறுக்கு செல்லும் வகையில் கோவிலில் இருந்து சற்று தள்ளி படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த படித்துறைக்கு அருகில் பழமையான மண்டபம் ஒன்று உள்ளது. அதனுள், சிவலிங்க சிலையும், நந்தி சிலையும் அமைந்துள்ளது. இங்கு 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான வட்டெழுத்துக்கள் பொறித்த இரு கல்வெட்டுகளும், 13 மற்றும் 14 நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.

கல்வெட்டுகள் மட்டுமின்றி ஆற்றங்கரையோரத்தில் சிவன், பசுவின் புடைப்புச் சிற்பங்கள் இடம்பெற்ற பாறைகளும் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் உள்ள வட்டெழுத்துக்கள், பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் கோவிலுக்கு நிலம் வழங்கிய கொடைத் தன்மை பற்றியும், ஏரிகள், கிராமங்கள், அரசின் வரிகள் பற்றியும் தெரிவிக்கின்றன.

கோவில் கல்வெட்டுகளில் மன்னர்களின் பெயர்கள் இடம்பெறுவது இயல்பான ஒன்று. ஆனால், பெண் ஒருவர் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டது புதிராக இருப்பதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

பழமையான இக்கல்வெட்டில், நடுவிநங்கை என்ற பெண் ஒரு விளக்கு மற்றும் 50 செம்மறி ஆடுகளை கோவிலுக்கு தானமாக வழங்கியதாக குறிப்புக்கள் உள்ளன. அதில், “ஐம்பது” என்ற வார்த்தையில் “” என்ற எழுத்து திரிசூலம் போன்ற வடிவத்தில் உள்ளது. அக்காலத்திலேயே பெண்கள் கோவிலுக்கு தானம் வழங்கி இருப்பதாக கூறியிருப்பது, 10-ம் நூற்றாண்டில் பெண்களுக்கு சொத்துகளின் மீது உரிமை இருந்ததையும், தங்களின் விருப்பத்தின் பெயரில் அறச்செயல்களுக்கு பெண்கள் தானம் வழங்கி வந்ததையும் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், கல்வெட்டு சேதமடைந்ததால் பல வாக்கியங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை.

வட்டெழுத்துக்கள் இடம்பெற்ற கல்வெட்டுகள் 10 நூற்றாண்டின் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவை. தற்போதைய தமிழ் எழுத்துக்கள் பல்லவ அரசின்(கிபி275-கிபி897) ஆட்சி காலத்தில் உருவானவை. அதன் பின் பல்லவர்கள் மத்திய தமிழ் நாட்டில் ஆட்சி புரியும் போது அவர்களின் தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்தனர். அவர்களுக்கு பின் ஆட்சிக்கு வந்தச் சோழப் பேரரசு பல்லவர்களின் தமிழ் எழுத்துக்களை ஏற்றும், அதைப் பாண்டிய தேசத்தில் அறிமுகம் செய்யவும் செய்தனர் என்று முன்னாள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சி.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பழங்கால தமிழ் மன்னர்களின் ஆட்சியில் கூட பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது என்பது ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆகவே, பழங்கால கல்வெட்டுகளை பாதுகாப்பதன் மூலம் இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடியும்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button