This article is from Dec 26, 2017

12 பொதுத்துறை வங்கிகளை நிரந்தரமாக மூட அரசு திட்டமிட்டுள்ளதா ?

பரவிய செய்தி

சென்ட்ரல் பேங்க், ஐ.டி.பி.ஐ பேங்க், தேனா பேங்க், இந்தியன் பேங்க் உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளை நிரந்தரமாக மூட அரசு திட்டமிட்டுள்ளது. தொடர்புடைய வங்கிகளில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தங்களது பணத்தை காத்துக் கொள்ளுங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

சில பொதுத்துறை வங்கிகளை நிரந்தரமாக மூட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறி வெளியான தகவல் யாவும் உண்மையில்லை என்று மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறியுள்ளனர்.

விளக்கம்

டந்த சில தினங்களுக்கு முன்பு, வங்கிகளில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தால் 12 பொதுத்துறை வங்கிகளை மத்திய அரசு நிரந்தரமாக மூட திட்டமிட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் உடனடியாக தங்களது வங்கி கணக்குகளில் உள்ள பணத்தினை பாதுகாத்து கொள்ளுமாறு ஓர் செய்தியானது சில புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

    சமூக வலைதளத்தில் பரவிய செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து டிசம்பர் 22-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில்,   ” வாராக் கடன்கள் அதிகரித்த காரணத்தினால் வங்கிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளன. எனவே அது போன்ற வங்கிகளை, வங்கிகள் சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலமாக நிரந்தரமாக மூட அரசு திட்டமிட்டுள்ளதாக முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. அவ்வாறு பரவிய செய்திகள் உண்மையானது அல்ல. குறிப்பிட்ட எந்தவொரு பொதுத்துறை வங்கிகளை மூடுவது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ” என்று கூறப்பட்டுள்ளது.

       ரிசர்வ் வங்கியை தொடர்ந்து மத்திய அரசும் பொதுத்துறை வங்கிகளை மூடுவது தொடர்பாக வெளியான தகவல்களை மறுத்துள்ளது. மேலும், இது குறித்து மத்திய நிதி சேவைகள்துறை செயலாளர் ராஜீவ் குமார் கூறுகையில், ” நாட்டில் நஷ்டத்தில் இயங்கி வரும் வங்கிகளின் நிலையை சரி செய்ய ரூபாய் 2.11 லட்சம் கோடி நிதியுதவி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆகையால், வங்கிகளை மூடுவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்திகளே. மேலும், வங்கிகளின் நிதி ஆதாரத்தை அதிகரிக்கவும், வங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார் “.

கடந்த நவம்பர் 1-ம் தேதி இந்திய நிதி அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், ” நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்கும் கட்டமைப்பிற்கு அரசு ஒப்புதல் அளிக்கின்றது. வங்கிகளை ஒருங்கிணைக்க செயல்படுத்தும் மாற்று வழிமுறைகள் அனைத்தும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் கீழ் செயல்படும் ” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆக, நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றனவே தவிர நிரந்தரமாக மூட போவதில்லை என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader