13 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிலை என்ன ?| ஆர்.டி.ஐ தகவல்

பரவிய செய்தி
பிரதமர் மோடி ஆட்சியில் வாக்குறுதி அளித்த 13 எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒன்றுக் கூட திறக்கப்படவில்லை. அடிக்கல் நாட்டியத்தோடு 5 மாநில எய்ம்ஸ் திட்டம் நிதி ஒதுக்காமல் நிற்கிறது மற்றும் 8 எய்ம்ஸ்க்கு இன்னும் முழு நிதி ஒதுக்கவில்லை.
மதிப்பீடு
சுருக்கம்
பிரதமர் மோடி ஆட்சியில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் குறித்து அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்தியா டுடே எழுப்பியக் கேள்விக்கு, நிதி அறிவிக்கப்பட்ட 8 எய்ம்ஸ் திட்டத்திற்கு முழு நிதிகள் வழங்கவில்லை. மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் அனுமதி அளிக்கப்பட்ட எய்ம்ஸ் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என 2018 ஜுன் மாதம் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1264 கோடியில் அமையும் எனக் கூறப்படுகிறது.
விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடியின் சாதனையாக எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரும் திட்டம் மேற்கோள்காட்டிக் கூறப்படுகிறது. ஜனவரி 27, 2019 -ல் மதுரை தோப்பூரில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், அறிவித்த 13 எய்ம்ஸ் மருத்துவமனை திட்டமும் முழுமை அடையவில்லை, 8 எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதியே ஒதுக்கவில்லை என ஆர்.டி.ஐ தகவலில் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த ஆர்.டி.ஐ தகவல் சென்ற வருடம் ஜூன் மாதம் வெளியாகி இருக்கிறது.
ஆர்.டி.ஐ தகவலின்படி,
- ஜம்மு, காஷ்மீர், பீகார், தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
- ஜம்மு, காஷ்மீர், பீகார், தமிழ்நாடு, குஜராத் எய்ம்ஸ் திட்டத்திற்கு காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை.
- 2020 ஆம் ஆண்டில் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் உத்தரப்பிரதேசம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 10 சதவீத நிதி மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
ஆந்திரப்பிரதேசம் எய்ம்ஸ் :
1,618 கோடி நிர்ணயிக்கப்பட்டு 2020 அக்டோபரில் முடிவடையும் எனக் கூறப்பட்ட ஆந்திரப்பிரதேச எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 233.88 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 2015 அக்டோபரில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான காலக்கெடுவிற்குள் பணிகள் முடிவடையும் என்பது சாத்தியமில்லை என கூறியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் எய்ம்ஸ் :
2016-ல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் பகுதியில் 1,011 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை 2020 மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என அனுமதி அளித்த நிலையில் அறிவிக்கப்பட்ட நிதியில் 10 சதவீதமான 98.34 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கம் எய்ம்ஸ் :
மேற்கு வங்கத்தின் நதியா மாவட்டத்தில் ரூ.1754 கோடியில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 278 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தொடக்கநிலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அஸ்ஸாம் எய்ம்ஸ் :
மே 2015-ல் அனுமதி அளித்த அஸ்ஸாம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அறிவிக்கப்பட்ட 1,123 கோடியில் 5 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஈரநிலத்தில் மருத்துவமனை அமைய உள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் பணிகளை நிறுத்த அறிவித்தது. எனினும், பின்னர் அதற்கான அனுமதிகள் பெறப்பட்டன.
ஜார்கண்ட் எய்ம்ஸ் :
2018மே மாதம் 1,103 கோடியில் அறிவிக்கப்பட்ட ஜார்கண்ட் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 237 ஏக்கர் நிலம் மற்றும் 9 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது. ஜார்கண்ட் எய்ம்ஸ் மருத்துவமனையின் முழுமையான சேவை 2021-ல் கிடைக்கப்பெறும் என அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.
ஹிமாச்சலப்பிரதேசம் எய்ம்ஸ் :
2017 ஆம் ஆண்டில் ஹிமாச்சலப் பிரதேசம் பில்சபூரில் 1,350 கோடியில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் துவங்காமல் அடிக்கல் நாட்டியத்தோடு இருக்கிறது.
பஞ்சாப் எய்ம்ஸ் :
2016 நவம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய பஞ்சாப் பதிண்டா எய்ம்ஸ் மருத்துவமனை 2020-ல் சேவையாற்றும் என பிரதமர் உறுதி அளித்தார். இதற்கு 36.57 கோடி மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன. மேலும், அதற்கான பணிகள் மெதுவாகவே நடைபெறுகின்றன. பிரதான கட்டிடங்களே கட்டமைக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா எய்ம்ஸ் :
1,577 கோடி அறிவிக்கப்பட்ட மகாராஷ்டிரா எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கு ரூ.231.29 கோடி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் எய்ம்ஸ் :
ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் அனுமதி அளிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதியானது நிர்ணயிக்கப்படவில்லை. இதுவரை 90.84 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான காலக்கெடுவும் நிர்ணயம் செய்யவில்லை.
பீகார் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 2015-16 யூனியன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதேபோன்று தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இடம் தேர்வாகியுள்ளது. ஆனால், நிதியோ, காலக்கெடுவோ நிர்ணயிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
13 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்று கூட முடிவடையும் நிலையில் இல்லை. அதற்கான முழு நிதியும் ஒதுக்கப்படவில்லை. 2020 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் கூட துவக்க நிலையிலேயே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
2019 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் உ.பி கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவை தொடங்க முயற்சித்து வருவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செப்டம்பர் 2018-ல் கூறி இருந்தார். ஆனால், கோரக்பூர் எய்ம்ஸ் திறக்கப்படுவது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
சில எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதுடன் பணிகள் துவங்காமல் உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பணிகள் முடிவடைய சில ஆண்டுகள் தேவைப்படும் என எடுத்துக் கொண்டாலும் அரசு நிர்ணயித்த காலக்கெடுவில் கூட பணிகள் முடிய வாய்ப்பில்லை என்றே தெளிவாக தெரிகிறது.
குறிப்பு : தமிழ்நாட்டில் மதுரை தோப்பூரில் 750 படுக்கை வசதியுடன் 1,264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துமனை பணிகள் 2022-க்குள் முடிவடையும் என சமீபத்தில் செய்தியில் வெளியாகி இருக்கிறது.