This article is from Dec 01, 2018

13 இலக்க எண் அழைப்புகளால் செல்போன்கள் வெடிக்குமா ?

பரவிய செய்தி

உங்கள் செல்போனிற்கு 13 இலக்க எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் அதனை எடுக்க வேண்டாம். அந்த அழைப்பை எடுத்ததால் விபத்து ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அனைவருக்கும் இந்த செய்தியைப் பகிரவும்.

மதிப்பீடு

சுருக்கம்

13 இலக்க எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை எடுத்தால் போன் வெடித்து விபத்து நேரிடும் என்பது முற்றிலும் தவறு. வாட்ஸ் ஆஃப்பில் வேகமாக பரவும் செய்தியுடன் இணைக்கப்பட்ட படங்களும் தவறானவை. குறிப்பாக, தமிழகத்தில் நடந்துள்ளதாக வதந்திகள் அதிதீவிரமாக பரவி வருகிறது.

விளக்கம்

வாட்ஸ் ஆஃப்பில்  தீக்காயம்பட்டது போன்று இருக்கும் மாணவர்கள், மாணவிகளின் புகைப்படங்கள் உடன் ஒரு எச்சரிக்கை செய்தி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதாவது, 13 இலக்க எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை எடுத்தால் போன் வெடித்து விபத்து நேரிடும் என்பதே அந்த செய்தி.

மாணவிகளின் புகைப்படங்கள் : 

வாட்ஸ் ஆஃப் செய்தியுடன் இணைக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகளின் புகைப்படங்கள், தீயணைப்பு வீரர்கள் இடம்பெற்ற காட்சிகள் போன்றவை கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் எடுக்கப்பட்டவை.

இதற்கு முன்பாக கேரளாவில் உள்ள பள்ளியில் தீயணைப்பு சம்பவம் நடைபெற்றதால் மாணவிகள், மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும், மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்று இணையத்தில் இதே புகைப்படங்களை வெளியிட்டு செய்தி வெளியிட்டு உள்ளனர். ஆனால், அதுவும் தவறான செய்தியே !

உண்மை நிகழ்வு :

2018 நவம்பர் 19-ம் தேதி கேரளாவில் உள்ள குடூர் பகுதியில் இருக்கும் “ KMHSS school “  இல் மலப்புரம் தீயணைப்பு குழுவால் நடத்தப்பட்ட தீ விபத்து பற்றிய முன்மாதிரி நிகழ்ச்சி மட்டுமே. மதியம் 2.30 மணி அளவில் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது போன்றும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பது, மாணவர்களுக்கு அந்நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற பாதுகாப்பு நடவடிக்கை பற்றி விரிவாகவும், தத்ரூபமாகவும் செய்து காட்டியுள்ளனர்.

நிகழ்ச்சி தத்ரூபமாக இருக்க மாணவர்கள், மாணவிகளுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது போன்று சாயங்கள் பூசி, சிகிச்சை செய்வது போன்று ஏற்படுத்தி உள்ளனர். மாணவ, மாணவியர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். இது பற்றிய வீடியோ ஒன்றில் தெளிவாக இது முன்மாதிரி வீடியோ என மலையாள மொழியில் பேசி உள்ளனர்.

இதனை வைத்து பள்ளியில் தீ விபத்து என வாட்ஸ் ஆஃப், ஃபேஸ்புக் உள்ளிட்டவையில் வதந்தியைப் பரப்பி உள்ளனர். அந்த வதந்தியில் இடம்பெற்ற படத்தை 13 இலக்க எண் என்ற வதந்தியுடன் இணைத்து பகிர்ந்து வருகின்றனர்.

13 இலக்க எண் :

உங்கள் செல்போனிற்கு 13 இலக்க எண்ணில் இருந்து அழைப்பு வந்து அதனை எடுத்தால் செல்போன் வெடிக்கும் என்பது முற்றிலும் தவறான தகவல். இதேபோன்று 6 என தொடங்கும் எண்கள் மற்றும் 812 என முடியும் எண்கள், 777888999 போன்றவைகளில் இருந்து அழைப்பு வந்தால் செல்போன் வெடிக்கும் என வதந்திகள் வருகிறது.YOUTURN சென்ற வருடமே இதை பதிவிட்டிருந்தோம்:

இதுபோன்ற எண்களில் இருந்து அழைப்பு வந்து செல்போன் வெடித்து விபத்து நிகழ்ந்ததாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

இந்த வதந்தி அதிதீவிரமாக தமிழகத்தில் வாட்ஸ் ஆஃப்களில் பரவி வருவதால் இத்தகவலை முடிந்த வரை அனைவருக்கும் பகிரவும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader