13,500 VIVO செல்போன்களுக்கு ஒரே IMEI எண் | மீரட் போலீஸ் வழக்குப் பதிவு !

பரவிய செய்தி
சீனத் தயாரிப்பான விவோவின் 13,500க்கும் அதிகமான ஸ்மார்ட் போன்கள் ஒற்றை IMEI எண்ணுடன் செயல்பட்டு உள்ளதாக மீரட் போலீஸ் கண்டறிந்துள்ளது. விவோ தொலைத்தொடர்பு மற்றும் அதன் சர்வீஸ் சென்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோவின் 13,500 செல்போன்களுக்கு ஒரே ஐஎம்இஐ எண் வழங்கப்பட்டு உள்ளதாக பகிரப்பட்ட மீம் குறித்த உண்மைத்தன்மையை ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டது. இது குறித்து தேடிய பொழுது ஜூன் 5-ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ், எகனாமிக்ஸ் டைம்ஸ் உள்ளிட்ட செய்திகளில் வெளியான தகவல் கிடைத்தது.
” மீரட் காவல்துறையின் சைபர்கிரைம் செல் பிரிவு நடத்திய 5 மாத விசாரணையில் பாதுகாப்பு மீறல் கண்டுபிடிக்கப்பட்டது. விவோ நிறுவனம் தயாரித்த 13,500க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் ஒரே சர்வதேச மொபைல் கருவி அடையாள (ஐஎம்இஐ) எண்ணில் இயங்குவதைக் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, சீனத் தயாரிப்பு நிறுவனத்தின் மீது மற்றும் சர்வீஸ் சென்டரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது “.
ஐஎம்இஐ எனும் 15 இலக்க எண் ஆனது ஒவ்வொரு போன்களுக்கும் தனித்துவமாக வழங்கப்படுவது வழக்கம். 2017-ல் ட்ராய் அமைப்பு அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் தனித்துவமான ஐஎம்இஐ எண்களை வழங்க வேண்டும், தவறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என அறிக்கை வெளியிட்டது.
மீரட்டில் உள்ள ஒரு விவோ சர்வீஸ் சென்டரில் பழுதுபார்க்கப்பட்ட பிறகும் செல்போன் சரியாக வேலை செய்யாதக் காரணத்தினால் ஒரு துணை ஆய்வாளர் தன்னுடைய செல்போனை சைபர்கிராம் பிரிவில் உள்ளவர்களிடம் சோதிக்க வழங்கிய போதே இந்த குறைபாடு வெளிச்சத்திற்கு வந்தது. அதேபோல், செல்போன் ஐஎம்இஐ எண்ணுக்கும் அட்டையில் உள்ள எண்ணுக்கும் வித்தியாசம் இருப்பதை கண்டறிந்தனர்.
மீரட் எஸ்.பி அகிலேஷ் என் சிங், இது ஒரு தீவிர பாதுகாப்பு பிரச்சனை என்றும், குற்றவாளிகள் அதை தங்கள் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என பி.டி.ஐ-க்கு தெரிவித்து உள்ளார்.