150 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தோன்றும் super blue blood moon.

பரவிய செய்தி
“super blue blood moon” என்னும் சந்திர கிரகணம் 150 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜனவரி 31-ம் தேதியில் தோன்ற உள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
1866 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் தோன்றும் super blue blood moon-ன் காட்சியானது பூமியின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காண இயலும் என்று நாசா அறிவித்துள்ளது.
விளக்கம்
பூமியின் நீள்வட்ட பாதையில் சுற்றி வரும் நிலவின் தோற்றமானது அதன் நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. அத்தருணத்தில் தான் சூப்பர் மூன் எனப்படும் முழு பெருநிலவு போன்ற காட்சிகள் தோன்றுகின்றன. அதேபோன்று வருகின்ற ஜனவரி 31-ம் தேதியில் நிலவானது super blue blood moon எனப்படும் நிலையில் காட்சியளிக்க உள்ளது.
முழு பெருநிலவு (super moon) :
நிலவானது நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வரும் போது, நீள்வட்ட பாதையில் பூமியை விட்டு நீண்ட தூரத்தில் இருக்கும் நிலைக்கு “ Apogee ” என்றும், பூமிக்கு மிக அருகில் இருப்பதற்கு Perigee என்றும் அழைப்பர்.
Perigee நிலையில் தான் சூப்பர் மூன் எனப்படும் முழு பெருநிலவு காட்சி தோன்றுகின்றது. இது பூமிக்கு மிக அருகில் நேர்கோட்டில் இருப்பதால் வழக்கத்தை விட நிலவானது 14 மடங்கு பெரிதாகவும், 30 மடங்கு அதிக வெளிச்சத்தையும் வெளிபடுத்தி அரிதாக காட்சியளிக்கும். எனினும், சூப்பர் மூன் எல்லா மாதங்களிலும் தோன்றுபவை அல்ல.
நீல நிலவு(Blue Moon):
ப்ளூ மூன் ஆனது ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவு தோன்றும் போது உண்டாகும். இம்மாதத்தில் 1-ம் தேதி முழு நிலவு தோன்றியது. அதேபோல் 31-ம் தேதியும் தோன்ற உள்ளது. ப்ளூ மூன் ஒரு முறை தோன்றிய பிறகு 2.7 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் தோன்றும்.
சூப்பர் ப்ளூ ப்ளட் மூன் :
சூப்பர் ப்ளூ ப்ளட் மூன் என்பது சந்திர கிரகணம் பூமியின் நீள்வட்ட பாதையில் Perigee நிலையில் பெரிதாக காட்சியளிப்பதோடு, பூமிக்கு சூரியனுக்கும் நேர்கோட்டில் உள்ள பூமியின் “Umbra” நிழல் பகுதியை கடக்கும்போது ப்ளூ ப்ளூட் சந்திர கிரகணமாக ஆக காட்சியளிக்கும். மேலும், penumbra நிழல் பகுதியில் பாதி சந்திர கிரகணமாக காட்சியளிக்கும்.
மார்ச் 31, 1866-ல் தோன்றிய சூப்பர் ப்ளூ ப்ளட் மூன் கிரகணம் 150 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜனவரி 31-ம் தேதியில் தோன்ற உள்ளது. இத்தகைய சூப்பர் ப்ளூ ப்ளட் மூன் கிரகணம் 76 நிமிடங்களுக்கு நீடிக்கும். அந்நேரத்தில் நிலவு பெரிதாக சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கும். இத்தகைய முழுநீள கிரகணம் தொடங்கி முடிவதற்கு 3 மணி நேரம் 23 நிமிடங்கள் ஆகும்.
சூப்பர் ப்ளூ ப்ளட் மூன் கிரகணத்தை பூமியின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காண இயலும் என்று நாசா அறிவித்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, வட அமெரிக்காவின் ஹவாய் தீவுகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் தெளிவாக காண இயலும். ஆசியா மற்றும் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பல நாடுகளில் சந்திர கிரகணத்தின் அரை வடிவத்தை மட்டும் காண இயலும் என்று நாசா அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஜனவரி 31-ம் தேதி மாலை 5.55 மணியளவில் கருமை சூழ்ந்த கிரணத்தை காணலாம். மேலும், பூமியில் பெரும்பாலான நாடுகளில் இக்கிரகணம் தெரிய வாய்ப்பில்லை.